
“அரசு ஆவணங்கள் பெறுவதற்கான வேட்டை முடிவற்றதாக இருக்கிறது.”
ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு உணவு பெறக் கூடிய ரேஷன் கார்டை பற்றிதான் குறிப்பிடுகிறார் கோடீஸ்வரி எஸ். தினக்கூலி யான அவர் தற்போது குழந்தைகளின் மதிய உணவுக்காக பள்ளிகளை சார்ந்து இருக்கிறார். அதைத் தாண்டி அவர்களால் சமைக்க முடிகிற இரவு உணவு மட்டும்தான்.
அவரும் கணவர் சண்முகமும் சென்னையின் தண்டையார்பேட்டை தாலுகாவிலுள்ள கொருக்குப்பேட்டையில் 12 வயது அருண், 10 வயது லஷ்மி மற்றும் ஒரு வயது குழந்தை ஆகிய மூன்று குழந்தைகளுடன் வசிக்கின்றனர்.
தொற்றுக்காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டபோது நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. “பசி கொடுமையாக இருந்தது,” என்னும் கோடீஸ்வரி அச்சமயத்தில் மூன்றாம் குழந்தைக்கான கர்ப்பத்துடன் இருந்தார். ரேஷன் கார்டு இல்லாமல், தொற்றுக்காலத்தில் கொடுக்கப்பட்ட மளிகை மற்றும் உணவுப் பொருட்களை குடும்பம் பெற முடியாதச் சூழல். “அதிகமாக போராடினோம்,” என்கிறார் அவர்.
இருவரும் அவர்களின் ஆதார் அட்டைகளை சில வருடங்களுக்கு முன் பெற்றனர். ஆதாரை முகவரிக்கான அத்தாட்சியாகக் கொண்டு ரேஷட் கார்டு பெற முயற்சித்தனர். ஆனால் தண்டையார்பேட்டை தாலுகா அலுவலக அதிகாரிகள் முகவரிக்கான அத்தாட்சியாக எரிவாயுக் கட்டண ரசீதைக் கேட்டதாக அவர் சொல்கிறார். “எரிவாயு இணைப்பு எங்களிடம் இல்லை. விறகடுப்பைதான் நாங்கள் பயன்படுத்துகிறோம். புது எரிவாயு இணைப்பு பெற ஆயிரக்கணக்கில் செலவாகும். தினந்தோறும் நாங்கள் பெறும் 100-200 ரூபாய் கொண்டு புது இணைப்பு பெற முடியாது,” எனக் கோடீஸ்வரி சுட்டிக் காட்டுகிறார்.


குடும்பம் பட்டியல் சாதியை சேர்ந்தது என அடையாளப்படுத்துவதற்கான சான்றிதழ் பெற 39 வயது சண்முகம் எம். முயன்று வருகிறார். “அவர்கள் (அதிகாரிகள்) சாதிச் சான்றிதழ் கொடுக்க நான் பள்ளிப்படிப்பு முடித்தச் சான்றிதழைக் கேட்டார்கள்,” என்கிறார் அவர். “எங்களிடம் இல்லாத ஆவணங்களை அவர்கள் கேட்கின்றனர்.”
அவர்கள் விரும்பும் சாதிச் சான்றிதழ் கிடைத்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் வருடந்தோறும் 5,000 ரூபாய் பெற்றுத்தரக் கூடிய திட்டத்தில் அவர்கள் பயனடைய முடியும். இத்தொகையை தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அளிக்கிறது. இவற்றுடன், “அரசாங்கம் கொஞ்சம் பணத்தையும் என் குழந்தைகளின் எதிர்காலத்துக்கென அவர்களின் வங்கிக் கணக்கில் போட்டு வைக்கும்,” என்கிறார் அவர்.
அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது: “நானோ என் கணவரோ பள்ளிக்கு சென்றதில்லை. எப்படி இந்த ஆவணத்தை நான் பெறுவது?” எனக் கேட்கிறார் 35 வயது கோடீஸ்வரி. ஏழு வயதில் அவர் உருக்கு இரும்பு ஆலையில் வேலை பார்த்ததிலிருந்து தொடர்ந்து வேலை பார்த்து வருகிறார். விவசாய நிலங்களிலும் செங்கல் சூளையிலும் கட்டுமானத் தளங்களிலும் இன்னும் பல இடங்களிலும் தினக்கூலியாக பணிபுரிந்த அவர் இறுதியில் சுண்ணாம்புக்கல் ஆலையில் சேர்ந்தார்.
“நான் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பால்யகாலத்திலிருந்து பல வேலைகளை நான் செய்து வருகிறேன். என்னுடைய கணவருக்கும் படிப்பில்லை. நாங்கள் இருக்கும் சூழலுக்கு நாங்கள் காரணம் இல்லை. ஆனால் அது எங்களை பாதித்துக் கொண்டிருக்கிறது,” என்கிறார் அவர்.
தொற்றுக்காலத்துக்கு முன்பு, கோடீஸ்வரியும் அவரது குடும்பமும் சண்முகத்தின் மூத்த சகோதரரது பள்ளி மாற்றுச் சான்றிதழைக் கொண்டு குழந்தைகளுக்கான சாதிச் சான்றிதழைப் பெற முயன்றனர். தொற்றுக்காலத்தில் அந்த முயற்சியை அவர்கள் தொடர முடியவில்லை. அதற்குப் பின் தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தை அணுகி கோடீஸ்வரி விசாரித்தபோது, சாதிச் சான்றிதழ் தயாரான தகவலும் யாரும் வந்து பெறாததால் திரும்ப அனுப்பப்பட்டுவிட்டதென்ற தகவலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இவற்றுக்கிடையில் விதிமுறைகள் மாறிவிட்டன. கணவரின் சகோதரரது ஆவணங்களைக் கொண்டு இனி சான்றிதழ் அவர்கள் பெற முடியாது. அதற்குப் பதிலாக சாதிச் சான்றிதழ் பெற கணவரின் பள்ளிச் சான்றிதழ்களைக் கொண்டு வரச் சொல்லியிருக்கின்றனர்.
கோடீஸ்வரி தன் முயற்சியை விடுவதாக இல்லை. “என் குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க விரும்புகிறேன். வாழ்க்கையில் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்,” என்கிறார் அவர்.
கோடீஸ்வரியும் சண்முகமும் 2009ம் ஆண்டில் மணம் முடித்தனர். சுண்ணாம்பு ஆலையில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்தனர். 2020-ல் முதல் ஊரடங்கு நேர்ந்தபோது ஆலை மூடப்பட்டது. அவர்கள் தனித்தனியே பெற்றுவந்த 250-300 ரூபாய் தினக்கூலியை இழந்தனர். “வேறு வேலை ஏதும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் பிச்சை எடுக்கவில்லை. நிவாரணப் பொருட்களைக் கொண்டு கொஞ்சம் சமாளித்தோம்,” என்கிறார் அவர்.
தொடக்கத்தில் சண்முகம் சுமை தூக்கும் வேலை செய்தார். ஆனால் வேலை தொடர்ச்சியாகக் கிடைக்கவில்லை. “தினசரி எனக்கு வேலை கிடைக்காது. வாரத்தில் அதிகபட்சம் இரண்டு நாட்கள் வேலை கிடைக்கும்,” என்கிறார் அவர். வேலை கிடைக்கும் நாட்களில், 300லிருந்து 500 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவார்.
இருவரும் வேலையிழந்த பத்து மாதங்களுக்குப் பிறகு புழலில் மேற்கு காவாங்கரையில் இருக்கும் புழல் மீன் சந்தையான JMHI சந்தையில் பணிபுரியத் தொடங்கினார் கோடீஸ்வரி. இங்கு மீன் வியாபாரிகளிடமிருந்து வாடிக்கையாளர்கள் வாங்கும் மீன்களை அவர் சுத்தப்படுத்தி வெட்டிக் கொடுக்கும் வேலை செய்கிறார். வேலை செய்து வேலை கற்றுக் கொண்டதாக சொல்கிறார்.
அவரின் நாள் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. குழந்தைகளுக்கான விஷயங்களை தயார் செய்து வைப்பார். பள்ளிக்கு மூத்த குழந்தைகள் செல்வதால் அவர்களின் சீருடைகளை தயார் செய்ய வேண்டும். பெரும்பாலும் குடும்பம் காலை உணவாக தேநீரை மட்டும் அருந்துகிறது. அவர்களின் ஒரு வயது குழந்தையான நேத்ராவை, பிற்பகல் 2 மணிக்கு கோடீஸ்வரி வீடு திரும்பும் வரை பக்கத்து வீட்டுக்காரர்களிடமோ சண்முகத்தின் தாயிடமோ விட்டுச் செல்வார்.



காலை 6 மணிக்கு, கொருக்குப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து பக்கத்து வீட்டுக்காரரும் நண்பருமான ராஜேஸ்வரியுடன் அரசுப் பேருந்தில் செல்வார் கோடீஸ்வரி. 7 மணிக்கு சென்றடைவார்கள். பிறகு அவர்களைப் போன்றோர் மீன்களை சுத்தப்படுத்தக் காத்திருக்கும் பகுதிக்கு செல்வார்கள். மீன் வாங்கும் வாடிக்கையாளர்கள், குறைந்த காசுக்கு மீனை சுத்தப்படுத்தி வெட்டி வாங்க அவர்களிடம் வருவார்கள்.
இந்த வேலையில் சவால்கள் இல்லாமலில்லை. “பிறரைக் காட்டிலும் குறைவான விலைக்கு நாங்கள் மீன் வெட்டி தருவதால், சந்தையில் இருப்பவர்கள் எங்களை விரட்டி விடுவார்கள். திடீரென அவர்கள் வந்து எங்களின் கத்திகளை பிடுங்கிக் கொள்வார்கள். எங்களிடமிருந்து செல்பேசிகளை கூட அவர்கள் பிடுங்கியிருக்கிறார்கள்,” என்கிறார் கோடீஸ்வரி.
மீன்களை வெட்ட பெண்கள் தனிக் கத்திகளை பயன்படுத்துவார்கள். ஒரு கத்தியின் விலை 100லிருந்து 200 ரூபாய் வரை இருக்கும். ஒருநாளின் வருமானம் அது என்கிறார் கோடீஸ்வரி. இரு பெண்களும் தங்களின் தின வருமானமான 300 ரூபாயை பிரித்துக் கொள்வார்கள். வார இறுதி நாட்களில் வருமானம் இரட்டிப்பாக வரும்.
“நாளின் உணவை அன்று ஈட்டிய வருமானத்தைக் கொண்டு உண்ணுகிறோம். ஒரு நாளில் ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறோம். காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் தேநீர் மட்டும் குடித்துக் கொள்வோம்,” என்கிறார் ராஜேஸ்வரி. கொருக்குப்பேட்டை அரசுப் பள்ளியில் குழந்தைகள் மதிய உணவு உண்ண முடிவதில் கோடீஸ்வரி சந்தோஷம் கொள்கிறார். தற்காலிக ஏற்பாடாக, ரேஷன் கார்டை பயன்படுத்தாதவர்களின் கார்டைக் கொண்டு அவ்வப்போது குறைந்த விலைக்கு அரிசியும் பருப்பும் ரேஷன் கடையில் பெற்றுக் கொள்கிறார். சட்டப்பூர்வமாக கிடைத்திருக்க வேண்டிய ரேஷன் கார்டுக்காக அவர்கள் அலைவதில் இருக்கும் முரண் மட்டும் மறையவில்லை.
“இந்த முறைகள் எங்களுக்கு புரியவில்லை. அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றும் தெரியவில்லை,” என அவர்கள் எதிர்கொள்ளும் குழப்பம் மற்றும் நிச்சயமின்மை ஆகியவற்றைக் குறித்து சண்முகம் கூறுகிறார்.
பாரியின் முகப்புப் பக்கத்துக்கு திரும்ப, இங்கு க்ளிக் செய்யவும்
Editor's note
ஆதித்யா ஸ்ரீஹரி , பாரியில் பயிற்சிப்பணி செய்து கொண்டிருந்த 2022-ம் ஆண்டில் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து கொண்டிருந்தார். டிஜிட்டல் கற்றல் இருக்கும் காலத்தில் கூட அடிப்படை ஆவணங்களை பெற முடியாத நிலையில் இருப்பதால் கோடீஸ்வரி குறித்து எழுத அவர் விரும்பினார். “கோடீஸ்வரியை சந்தித்த பிறகு வளர்ச்சி குறித்த பிரச்சினைகளை நான் பார்க்கும் விதம் மாறியது. செய்தியை கட்டுரையாக்கும் முறை, சாமானிய மக்களின் வாழ்க்கைகளை புரிந்து கொள்ள எனக்கு உதவியது. செய்திக்கென ஒரு கதைசொல்லல் வடிவத்தைக் கொடுப்பதும் அதை தொகுப்பதும் வளர்ச்சி சார்ந்த இதழியலில் கரிசனத்தின் முக்கியத்துவத்தை நான் உணரச் செய்தன.”
தமிழில்: ராஜசங்கீதன்
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணிபுரிகிறார்