நாராயணன்குட்டிக்கு வீடே பட்டறையாகவும் செயல்படுகிறது. புகைப்படம்: வர்ஷா நாயர்

நாராயணன்குட்டி ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு தென்னங்குருத்திலிருந்து மீனை உருவாக்குகிறார், பூ ஜாடியை உருவாக்குவதற்கு அவருக்கு ஒரு மணி நேரம் ஆகிறது மற்றும் விளக்கினை உருவாக்க அவருக்கு அதற்கும் அதிகமான நேரம் தேவைப்படுகிறது.

“குருத்தோலையில் முக்கியமானது என்னவென்றால் தென்னை ஓலையை சரியாக சீவி வெட்டுவதுதான். நான் கத்தியையும், கத்தரிக்கோலையும் எனது கருவிகளாக பயன்படுத்துகிறேன். ஓலைகளை வெட்டிய பிறகு அதிலிருந்து அலங்கார பொருட்களை உருவாக்குவது எளிதாகிறது,” என்று விளக்குகிறார் நாராயணன்குட்டி. பசுமையான இளம் தென்னை ஓலைகளை பயன்படுத்தி இந்த 60 வயதாகும் கலைஞர் மீன் மற்றும் பூ ஜாடி மட்டுமல்லாமல் ஊதி, நட்சத்திரம், தொப்பி, பாம்பு மற்றும் அலங்கார தோரணங்கள், பூக்கள், விலங்குகள் என்று இன்னும் பலவற்றை உருவாக்குகிறார். கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சேரூரில் இருக்கும் தனது வீட்டிலிருந்து எங்களுடன் பேசிய அவர்:  “கேரள மாநிலம் கலோல்சலம் மற்றும் திருச்சூர் கோவில் திருவிழா உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விழாக்கள், திருமணங்கள் என பலவற்றிற்கு நான் அலங்காரம் செய்து கொடுத்திருக்கிறேன்,” என்றார்.

சூரியகாந்தி, அண்ணாச்சி அல்லது பலா போன்ற மாதிரிகளை உருவாக்குவதற்கு நுணுக்கமான வேலை செய்ய வேண்டியிருக்கும் அதனால் அதை செய்வதற்கு நேரமும் கவனமும் அதிகம் தேவைப்படும், இவற்றிற்கு நாராயணன்குட்டி 800 ரூபாய் வாங்குகிறார்; சிறிய கிளி ஒன்றை உருவாக்குவதற்கு 50 ரூபாய் வாங்குகிறார்.

“சூரியகாந்தி பூ செய்வதற்கு தென்னை ஓலையின் ஈர்க்குச்சி இருக்கும் இடத்திலிருந்து மடித்து மடித்து இலையை 4 அங்குல துண்டுகளாக வெட்டுங்கள். பூவின் தண்டினை செய்ய ஈக்கு குச்சியிலிருந்து இரண்டு சென்டிமீட்டர் வட்டத்தை வெட்டி பின்னர் மடிக்கப்பட்ட இதழின் வடிவத்தை உருவாக்க ஓலையின் அடிப்பகுதியில் இருந்து சாய்வாக வெட்ட வேண்டும். இப்போது ஓலையை விரித்தால் இதழ் தயார்.”

“ஒரு நடுத்தர அளவிலான சூரியகாந்திப்பூ தயாரிக்க உங்களுக்கு இதைப் போன்ற 12 முதல் 13 இதழ்கள் தேவைப்படும். பூவின் முழுமையான தோற்றத்தை பெற இந்த இதழ்களை ஒரு வாழைத் தண்டின் மேல் சொருகவும்,” என்று நாராயணன்குட்டி விளக்குகிறார், அவருடைய கைகள் இந்த ஓலைகளை நேர்த்தியாக வடிவமைக்கிறது.

அலங்கார வேலைகள் வாடிக்கையாளரின் தேவையைப் பொறுத்தது. இந்த குருத்தோலை பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் மிகக் குறைந்த ஆயுட்காலம் கொண்டவை, வெட்டப்பட்ட ஓலைகள் சில நாட்களில் வாடி வதங்கிவிடும், அதனால் நான் வேகமாக வேலை செய்ய வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

“நான் 1998-ல் இந்தக் களத்தில் நுழைந்தபோது நான் இதை முறையாகக் கற்றுக் கொள்ளவதற்கு எனக்கு தெரிந்த யாரும் இல்லை. நான் சிறுவயதில் எனது நண்பர்களுடன் குருத்தோலை பொம்மைகள் செய்ததின் நினைவு மட்டுமே இருந்தது. தென்னை ஓலைகள் எளிதில் கிடைப்பதால் நான் நிறைய பணம் முதலீடு செய்ய வேண்டியதில்லை,” என்று கூறிக்கொண்டே ஒரு மீன் பொம்மையை செய்து முடிக்கிறார் நாராயணன்குட்டி.

“இந்த குருத்தோலை பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் மிகக் குறைந்த ஆயுட்காலம் கொண்டவை, வெட்டப்பட்ட ஓலைகள் சில நாட்களில் வாடி வதங்கிவிடும், அதனால் நான் வேகமாக வேலை செய்ய வேண்டும்.” புகைப்படம்: வர்ஷா நாயர்

தென்னை மரங்கள் கேரளாவின் கலாச்சாரம் மற்றும் புவியியல் நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன, மேலும் இதை மலையாளத்தில் ‘கல்பவிருட்சம்’ என்று அழைக்கின்றனர், ஆங்கிலத்தில் இதன் பொருள் சொர்க்கத்தின் மரம். தென்னை மரத்தின் அனைத்து பாகங்களும் – இலை, காய், மட்டை மற்றும் தண்டு உட்பட அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது. தென்னை வளர்ச்சி வாரியத்தின் (2011 -12 கான புள்ளிவிவரங்களின்படி) இந்தியாவில் தென்னை சாகுபடியின் மொத்த பரப்பளவு சுமார் 20.39 லட்சம் ஹெக்டேர் இதில் கேரளாவில் மட்டும் 7.66 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.

“கேரளாவில் கிட்டத்தட்ட அனைவருக்கும் தென்னை ஓலைகளிலிருந்து உருவமோ அல்லது பொம்மையோ எப்படி செய்வது என்று தெரியும். ஆனால் மற்ற பொம்மைகள் (பெரும்பாலும் பிளாஸ்டிக்), வந்த பிறகு மக்கள் குருத்தோலை பொம்மைகளை மறந்துவிட்டனர்,” என்று தன் வாழ்நாள் முழுவதும் திருச்சூர் வில்லாடத்தில் வாழ்ந்த 74 வயதாகும் கனக்கம் கோபிநாத் கூறுகிறார்.

நாராயணன்குட்டி சுமார் 40 வயதில் குருத்தோலை செய்வதை ஒரு தொழிலாக மாற்றினார். “நான் மின் வேலைகள் செய்து வந்தேன், ஆனால் சில வருடங்களுக்கு பிறகு நான் தனியாக இருந்தேன். உதவிக்கு யாருமில்லை. 1990களின் பிற்பகுதியில் நான் எலக்ட்ரீசியன் வேலையை விட்டுவிட்டு சுயதொழில் செய்ய முடிவு செய்தேன்,” என்று அவர் விளக்குகிறார்.

தன்னையும் அவரது கலையையும் நிலைநிறுத்த அவருக்கு முயற்சியும் காலமும் தேவைப்பட்டது. இப்போது 61 வயதில் நாராயணன்குட்டி தனது சொந்த பெயரில் பணியாற்றி வருகிறார் – நவநீத் குருத்தோலை அலங்காரம் – அவரது வீடே அவரது பட்டறையாகவும் செயல்படுகிறது. இந்த கைவினையைக் கலையை பிரபலப்படுத்த, தேவைப்படும் குழந்தைகளுக்கு பட்டறைவகுப்புகளும் நடத்துகிறார். அவர் தனது மனைவி வசந்தகுமாரி மற்றும் மகன்களான வினீத் மற்றும் நவீன் ஆகியோருடன் வசித்து வருகிறார், தேவைப்படும் பட்சத்தில் அவர்களும் இவருக்கு உதவுவார்கள். “எனது மகன்கள் (வேறிடத்தில்) வேலை செய்கின்றனர் மேலும் அவர்கள் இந்தத் துறையில் தங்கள் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள விரும்பவில்லை,” என்று அவர் கூறுகிறார்.

இடமிருந்து வலமாக: நாராயணன்குட்டி மற்றும் வசந்தாவின் வீட்டிற்கு வெளியே, மூத்த மகன் நவீன் 29, அவரது மனைவி வசந்தகுமாரி 52, நாராயணன்குட்டி 61, அவரது மருமகள் சுதீனா 21, அவரது சகோதரர் ராஜேந்திரன் 45, அவரது தம்பியின் மகள்கள் ஆர்த்ரா தேவிகா 14, பிந்ரா லக்ஷ்மி11 மற்றும் அவரது இளைய மகன் வினீத் 26 ஆகியோர் நிற்கின்றனர். புகைப்படம்: வர்ஷா நாயர்

நாராயணன்குட்டி ஆந்திரா போன்ற தொலைதூர இடங்களுக்கும், கோயம்புத்தூர் போன்ற அருகிலிருக்கும் இடங்களுக்கும் பயணம் செய்திருக்கிறார். “நான் எனது கைவினையை காட்சிப்படுத்த வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்தேன். எனது முதல் குருத்தோலை அலங்கார வேலைகளில் ஒன்று ஆண்டுதோறும் நடைபெறும்

திருச்சூர் மண்ணும்காட்டில் உள்ள தென்குளங்கரா காளி கோயிலில் செய்யப்பட்டது. இது எனக்கு அங்கீகாரம் பெற உதவியது,” என்று அவர் பழைய ஆல்பங்களின் பக்கங்களை புரட்டும் போது அவரது வேலையின் புகைப்படங்களை சுட்டிக்காட்டி கூறுகிறார். “எனது வேலையின் மூலம் அதிகமான மக்கள் என்னை அறியத் தொடங்கினர் மேலும் அதன் மூலம் எனக்கு அதிக வேலைகள் கிடைத்தது. நான் எங்கு சென்றாலும் குருத்தோலை பொம்மைகள் செய்து குழந்தைகளுக்கு கொடுப்பேன். நான் எப்போதும் என்னுடைய கருவிகள் என்னிடம் இருப்பதை உறுதி செய்து கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

ஊரடங்கு மற்றும் பெரிய கூட்டங்களுக்கு தடை விதிப்பது அவரது குருத்தோலை தொழிலுக்கு ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. “எனக்கு இப்போது எந்த ஆர்டர்களும் வருவதில்லை. (கோவிடிற்கு பிறகு) பண்டிகைகள் அல்லது கொண்டாட்டங்கள் எதுவுமில்லை, நிகழ்வுகள் நடந்தாலும் அவை சிறிய அளவில்தான் இருக்கின்றன,” என்று கூறுகிறார் நாராயணன்குட்டி.

ஆர்டர்கள் குறைந்து வருவதைத் தவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பொருட்களை வாங்குவது அவருக்கு சவாலாக இருக்கிறது. “இளம் குருத்துகள் எளிதில் வாடிவிடும் அதனால் எனது மூலப் பொருட்களை சேமித்து வைக்க முடியாது. தேவைக்கு ஏற்ப வாங்குவேன். ஊரடங்கு கட்டுப்பாடுகளின் காரணமாக ஓலை வாங்குவதில் நிறைய சிரமங்கள் இருக்கிறது,” என்று அவர் கூறுகிறார். சில நேரங்களில் நாராயணன்குட்டி அவரது வாடிக்கையாளர்களையே தென்னை ஓலைகள் வழங்குமாறு கேட்கிறார். “அவர்களால் வழங்க முடியாத பட்சத்தில் தென்னை மரம் ஏறுபவர்கள் மற்றும் தென்னை மரம் வெட்டுபவர்களைத் தொடர்புகொண்டு இளங்குருத்துகள் எங்கு கிடைக்கும் என்று கண்டுபிடிக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

அவருக்கு பெரிய அலங்கார வேலைகள் கிடைக்கும் போது நாராயணன்குட்டி அந்த இடத்திலேயே இரவில் தங்குவார். “திருமண மேடை அலங்காரத்திற்கு நீண்ட நேரம் எடுக்கும். நான் முதல் நாளே அங்கு சென்று இரவு முழுவதும் விழித்திருந்து வேலையை முடித்துக் கொடுப்பேன். அத்தகைய நாட்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேர உறக்கம் தான் எனக்கு கிடைக்கும்.” உறக்கம் இல்லாதது பற்றி பிரச்சனை இல்லை ஆனால் “வேலை செய்யாவிட்டால் எனது கைகள் விரைத்துவிடும்,” என்று தற்போதைய நிலை குறித்து குறிப்பிடுகிறார்.

நாராயணன்குட்டி மலையாளி கலைஞர்களுக்கான தேசிய சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார், திருச்சூரைச் சேர்ந்த குன்னம்குளத்தை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வரும் இது ஒரு மாநில அளவிலான அமைப்பு. “அவர்கள் கோவிட் முதல் அலையின் போது கலைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக நான் கேள்விப்பட்டேன். எனக்கு எந்தவித நிதி உதவியும் இதுவரை கிடைக்கவில்லை. அரசாங்கம் உட்பட அனைவருக்கும் கலைஞர்கள் தேவை, ஆனால் அவர்களுக்கு ஒரு தேவை என்றால் எப்போதும் யாரும் உதவமாட்டார்கள்,” என்று கூறினார்.

“நான் மகிழ்ச்சியாக இந்த வேலையைச் செய்கிறேன். நான் இந்த சிங்கத்தோடு (மலையாள வருடத்தின் முதல் மாதம், திருமணங்கள் நடத்துவதற்கு உகந்த மாதமாகவும் கருதப்படுகிறது, அது இந்த வருடம் ஆகஸ்டில் வருகிறது) இந்தப் பெருந்தொற்று முடிந்து, எனது வேலைக்கு அதிக தேவைகள் ஏற்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறி முடித்துக் கொண்டார்.

Editor's note

வர்ஷா நாயர் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ஊடகப் படிப்பில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார். அவர் கேரளாவின் கைவினைப் பொருட்களில் ஆர்வம் கொண்டவர் மற்றும் பாரி கல்விக்குழுவில் கற்றுக்கொள்ளும் நபராக இருந்த போது அவர் குருத்தோலையை குறித்து எழுத முடிவுசெய்துள்ளார்.
அவர் கூறுகிறார்: "நான் முதன்முதலில் நாராயணன்குட்டியை ஒரு கோவில் திருவிழாவில் 2017ஆம் ஆண்டு சந்தித்தேன். இந்த கதைக்காக அவரிடம் பேசும்போது இந்த கைவினை குறித்த நுணுக்கங்களையும், ஒவ்வொரு பொருளையும் உருவாக்குவதற்கு ஆகும் நேரம் மற்றும் உழைப்பையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதைக் குறித்து எழுதும்போது அவரைப்போன்ற கைவினை கலைஞர்களுக்கு பெருந்தொற்று எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நான் நெருக்கமாக பார்த்தேன்."
தமிழில்: சோனியா போஸ்
சமூகவியல் முதுநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.