
இக்கட்டுரை ஒடியா மொழியில் முதலில் எழுதப்பட்டது. பாரி கல்வி, இந்தியா முழுவதிலும் தங்களின் மொழித் தேர்வில் செய்தி சேகரித்து, எழுதி, சித்திரம் தீட்டும் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், கல்வியாளர்களுடன் பணியாற்றி வருகிறது.
இந்த கடாகலா ஹாட் சேவல் சண்டையில் ‘வெல்பவர் அனைத்தையும் எடுத்துச் செல்வார்’.
சேவல் சண்டையில் நுழைவதற்கு ராஜூ முண்டா ரூ.500 செலுத்தியுள்ளார். அவர் வென்றால் அவருக்கு பணம் திரும்ப கிடைக்கும். மற்ற பறவைகளுக்கும் உரிமையாளர் ஆகிவிடலாம். அவரிடம் பெரிய சண்டை சேவல் இருந்தால் ரூ. 2000 செலுத்தி கலந்துகொள்ளலாம். வெற்றிபெற்று விட்டால் அதைவிட பெரிய சேவலுடன் பணத்தையும் திரும்பப் பெறலாம்!
கெந்துஜார் (கியோன்ஜார் என்றும் சொல்லப்படுகிறது) மாவட்டம் பன்ஸ்பால் வட்டத்தில் நடைபெறும் இந்த ஹாட்டில் சேவல் சண்டை நல்ல விளையாட்டு. இந்த வட்டாரத்தின் பாதிப் பேர் புய்யா, முண்டா, ஜூவாங் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர்கள். 1960 அல்லது அதற்கு முன்பிருந்து இந்த ஹாட் செயல்பட்டு வருவதாக இங்குள்ள பெரியவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
இப்பகுதியில் வேளாண் பருவமான அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் இச்சண்டை பொதுவாக நடைபெறுகிறது. ஜூலையில் விதைக்கப்படும் நெல்மணிகள் கிட்டதட்ட இச்சமயத்தில் தான் பச்சை பயறு, உளுந்து (உள்ளூரில் பிரி என அழைக்கப்படுகிறது), துவரையுடன் (ஹராட் என்பது உள்ளூர் பெயர்) அறுவடை செய்யப்படுகிறது. மாவட்டத்தின் (கணக்கெடுப்பு 2011) மொத்தமுள்ள 1,02,527 மக்கள்தொகையில் விவசாய தொழிலாளர்களும், விவசாயிகளுமே பெரும்பான்மையாக உள்ளனர்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை முதல் இரவு வரை நடக்கும் இந்த வாரச் சந்தையை ஆவணப்படுத்த வெஜிதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் நாங்கள் நான்கு பேரும் ஆசிரியர் தீப்திரேகா பத்ராவுடன் சென்றோம். 2021 பருவ கால சண்டை சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. காவல்துறையினரின் நெருக்கடி காரணமாக சில ஆண்டுகள் போட்டிகள் நடத்தப்படவில்லை. விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960 அத்தியாயம் 3, பிரிவு 11, (m), (ii), (n), ’சட்டப்படி எந்த விலங்கையும் சண்டையில் ஈடுபடுத்தினால்’ ரூ.10 முதல் ரூ.100 வரை அபராதம் செலுத்த வேண்டும்.
முகங்களைக் கொண்டு அடையாளம் கண்டுவிடுவார்கள் என்ற அச்சத்தில் யாரும் எங்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. எங்களை பார்ப்பதற்கோ, எங்களது கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கோ யாருக்கும் நேரமில்லை. அனைவரும் போட்டியை தீவிரமாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.



இடது: போட்டியாளர்கள் தயாராகின்றனர். கடக்கல் ஹாட்டில் போட்டி தொடங்குகிறது (நடுவில்). பபித்ரா பெஹரா எடுத்த புகைப்படங்கள். வலது: சேவல் சண்டைக்கு தயாராகும் இரு நண்பர்கள். அங்கித் பெஹரா எடுத்த புகைப்படம்
புகழ்பெற்ற கந்ததார் அருவியிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலகாதகல் ஊராட்சியில் கடகலா (கொடகலா என்றும் சொல்லப்படுகிறது) ஹாட் நடைபெற்றது. கியோஞ்சார் சதார் வட்டாரத்தில் உள்ள கலண்டா மற்றும் அதே வட்டாரத்தைச் சேர்ந்த நயாகோட்டி, சிங்பூர் போன்ற இடங்களில் இருந்தும் 30 கிலோமீட்டர் வரை வியாபாரிகளும், வாங்குபவர்களும் பயணம் செய்து இங்கு வருகின்றனர்.
58 வயது வசந்தா நாயக் தனது மசாலா பொருட்களை விற்பதற்காக வந்துள்ளார். தனது குழந்தைப் பருவத்தில் ஹாட் இருந்ததை அவர் நினைவுகூர்கிறார். “கைவினை மூங்கில் பானைகள் முதல் உளுந்து, கடுகு போன்ற வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு இச்சந்தைக்கு மிக குறைவான மக்களே வருவார்கள். இங்கு உணவு கிடைக்காது என்பதால் அவர்களே கொண்டு வந்துவிடுவார்கள். வாகன வசதிகள் எதுவும் கிடையாது என்பதால் மக்கள் பெருங்குழுவாக வருவார்கள், காடுகளின் வழியாக [சந்தை முடிந்ததும்] அன்றே திரும்பாமல் அருகில் உள்ள உறவினர் வீடுகளில் தங்கிவிட்டு அடுத்தநாள் காலையில் செல்வார்கள்.”
சேவல் சண்டையை காண ஹாட்டிற்கு பெருமளவிலான மக்கள் வருவதைக் காண முடிகிறது. மூங்கில் குச்சிகள் கொண்டு வட்டமாக நடப்பட்டு பெருமளவிலான பகுதி ஒதுக்கப்படுகிறது. வட்ட தளத்தில் 30 போட்டிகள் வரை நடைபெறுகின்றன. களத்தை தயார் செய்யும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு சண்டையிலும் ரூ.100-200 வரை தங்களின் பங்கிற்கு எதிர்பார்க்கிறார்கள்.
உணவு, பாத்திரங்கள், மசாலா பொருட்கள், காய்கறிகள், கோழிக்கறிகள், ஆடுகள், இறைச்சி, மீன், வன பொருட்களான தேன், நெல்லி, மூங்கில் சாறு (மூங்கில் மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது), மூங்கில் பானைகள், பிற கைவினைப் பொருட்களை வாங்குவதற்கு வரும் மக்கள் நின்றபடி போட்டிகளை பார்க்கின்றனர். உங்களது மிதிவண்டியை பழுதுபார்த்துக் கொள்ளலாம், ஐஸ்கிரீம், பலகாரங்கள், சமோசாக்கள் போன்ற பிற தின்பண்டங்களையும் வாங்கலாம்.


கோவிட் ஊரடங்குகளின் போது மோட்டார் வாகனங்களே சாலையில் காணப்பட்டன. மிதிவண்டிகளைக் காண முடியவில்லை. இதனால் 30 ஆண்டுகளாக மிதிவண்டி பழுது நீக்கி வரும் 58 வயது சுக்குரு கிரி பாதிக்கப்பட்டுள்ளார். கெந்துஜார் சதாரில் உள்ள நரசிங்கபூர் வாசியான அவர், சந்தை நாட்களில் சுமார் ஐந்நூறு முதல் எந்நூறு ரூபாய் வரை சம்பாதித்துவிடுவேன் என்று சொல்கிறார். “நான் பள்ளிக்குச் சென்றதில்லை, என் மாமா மிதிவண்டிகளை பழுதுநீக்கும் போது பார்த்து கற்றுக் கொண்டேன். இருசக்கர வாகனங்களுக்கான பஞ்சர் ஒட்டும் வேலையும் செய்கிறேன்,” என்றார் அவர்.
64 வயதாகும் துபுலி பெஹரா 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குசகலாவில் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் சொந்த பயன்பாட்டிற்காக மானாவாரி அரிசி பயிரிடுகிறார். ஆறு ஆண்டுகளாக வளையல்களை விற்று வரும் அவர் சந்தை நாட்களில் சராசரியாக ரூ.300 முதல் 400 வரை ஈட்டுகிறார். “நான் முன்பு ஹண்டியா [இலுப்பைப் பூவில் தயாரிக்கப்படும் சாராயம்] விற்றேன். ஒருமுறை எங்கள் கிராமத்தில் நடைபெற்ற சுயஉதவிக் குழு கூட்டத்தின் போது இதற்கு பதிலாக வளையல்களை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டேன். இப்போது எனக்கு வருமானம் குறைந்தாலும், என் சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கிறது,” என்றார் அவர். ஒரு டசன் வளையல்கள் ரூ.30க்கு விற்கப்படுகிறது.


மூங்கில் மரச் சாறுக்கு (ஷோரியா ரோபஸ்டா) உள்ளூரில் ராஷ் என்றுப் பெயர். இச்சந்தையில் விற்பதற்காக ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுண்டுரா என்ற தனது கிராமத்திலிருந்து வருகிறார் ரமணி தெஹூரி. “முன்பெல்லாம் நிறைய மரங்கள் இருக்கும் மூங்கில் மரங்களில் பால் எடுப்பது எளிதாக இருந்தது. அதில் ராஷ் செய்து பூஜையில் பயன்படுத்துவார்கள். இப்போது காடுகளில் மரங்கள் வெட்டப்படுவதால் மூங்கில் பால் கிடைப்பது கடினமாகிவிட்டது. காடுகளில் இருந்து மூங்கில்களைக் கொண்டு வந்து நான் பானைகள், ஜாடிகள் செய்வேன். அவற்றிற்கு சந்தையில் 700-800 ரூபாய் வரை பெறுவேன்,” என்றார் அவர்.
தர்மு பெஹராவை நாங்கள் சந்தித்தபோது, நம்மிடம் அவர் சொன்னார், “குறைவாகச் சாப்பிட்டாலும், உங்கள் பிள்ளைகளை படிக்க வையுங்கள்.” இப்போது 52 வயதாகும் அவர் பெற்றோர் படிக்க வைக்காததால் பள்ளியில் இடைநின்றவர். அதற்குப் பதிலாக தந்தையிடம் இருந்து சக்கரம் சுற்றி மண் பாண்டங்கள் செய்ய கற்றுக் கொண்டார். தனது பிள்ளைகள் படித்துவிட்டு பிற துறைகளை தேர்வு செய்ய வேண்டும் என அவர் விரும்புகிறார்.
சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெஜிதி கிராமத்திலிருந்து அவர் பயணித்து வருகிறார். “இப்பானைகளை நான் என் தோள்களில் சுமக்கிறேன். நான் வேனில் வந்தால் பானைகள் உடைந்துவிடும்,” என்று நம் கேள்விக்கு அவர் பதிலளிக்கிறார்.
“நீரை குளிர்ச்சியாக வைப்பதற்கு மக்கள் இப்பானைகளை முன்பு பயன்படுத்தினர். இப்போது தேவை குறைந்துவிட்டதால் வாரத்திற்கு சுமார் 1000 முதல் 1200 ரூபாய் வரை மட்டுமே சம்பாதிக்கிறேன்,” என்கிறார் அவர். கெந்துஜார் சதார் வட்டாரத்தில் உள்ள நரசிங்கப்பூர், பன்ஸ்பான் வட்டத்தில் உள்ள சுடங்கா போன்ற இடங்களுக்கு சென்று 32 ஹாட்டுகளில் தருமு மவுசா தனது பாண்டங்களை விற்கிறார். சிறு வயதில் தந்தையுடன் சென்று விற்றதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.


பல வகையான மசாலாக்கள், உருளைக் கிழங்கு வகைகள், வெங்காயம், பூண்டு, எண்ணெய், கருவாடு இன்னும் பலவற்றை விற்பவர் பன்ஸ்பால் வட்டாரம் குசகலா கிராமத்தைச் சேர்ந்த 55 வயது யாமினி கிரி. கடந்த 20 வருடங்களாக வந்து கொண்டிருக்கிறார். 10 கிலோமீட்டர் தொலைவிலிருந்து வருவதற்கு அவர் வேன் கட்டணமாக ரூ.300 செலவிடுகிறார். “திருமணமான 10 ஆண்டுகளில் என் கணவர் இறந்துவிட்டார். என்னால் சமாளிக்க முடியவில்லை – ஒரு நாளுக்கு இருவேளை உணவிற்குகூட வழியில்லை,” ஹாட்டில் எப்படி விற்பனையைத் தொடங்கினார் என்பதை அவர் இவ்வாறு விளக்குகிறார்.




அஸ்பையர் (உள்ளடக்கிய மற்றும் தொடர்புடைய கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு சமூகம்) எனும் அரசு சாரா நிறுவனம் மற்றும் டாடா எஃகு அறக்கட்டளையின் ஆயிரம் பள்ளித் திட்டத்தின் கற்றலை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இக்கட்டுரையை நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அளித்துள்ளனர். திட்டத்தின் ஒரு பகுதியாக தங்கள் சுற்றுப்புறத்தை அறியும் வகையில் இக்கட்டுரையை அவர்கள் படைத்துள்ளனர்.
இக்கட்டுரைக்கு உறுதுணையாக இருந்த சுதீபா சேனாபதி, திப்திரேகா பத்ரா, ஸ்மிதா அகர்வால் ஆகியோருக்கு பாரி கல்விக் குழுவின் சார்பில் இதயங்கனிந்த ‘நன்றியை‘ தெரிவித்துக் கொள்கிறோம்.
Editor's note
பபித்ரா பெஹரா, லிஜா பெஹரா, அங்கித் பெஹரா, ஷங்கர் பெஹரா ஆகியோர் கடக்கலா கிராமத்தில் உள்ள விஜிதிஹி உயர் தொடக்கப் பள்ளியில் 4-5 வகுப்புகள் படிக்கின்றனர்.அங்கித் சொல்கிறார்: “இச்சந்தைக்கு நான் அவ்வப்போது சென்று துணிகள் வாங்குவேன். ஆனால் சேவல் சண்டை போன்றவற்றை என் ஆசிரியருடன் செல்லும்போது தான் காண முடிந்தது. வியாபாரிகளுடன் உரையாடியபோது அவர்களின் போராட்டத்தையும் அறிய முடிந்தது.”
பாரி கல்வியில் சன்வித்ரி ஐயர் பயிற்சி மாணவராக இருக்கிறார். இவர் இக்கட்டுரையை எழுதியவர்களுடன் நெருங்கிப் பணியாற்றினார். ரட்டிவாலாவை பொதுமுடக்கம் எப்படி பாதித்தது என்று 2021 செப்டம்பர் மாதம் வெளியான அவரது செய்தி கட்டுரையை நீங்கள் படிக்கலாம்.
தமிழில்: சவிதா
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.