“5.30 முதல் 6.30 மணி வரை எங்கள் கங்குரா கிராமத்தில் ஒரே அமைதி நிலவியது. காற்றும், மழையும் நின்றிருந்தது. புயல் ஓய்ந்துவிட்டது என்று நான் நினைத்தேன். பின்னர் காற்று வீச துவங்கியது. திசை மாறி, வேகம் அதிகரித்தது போல் தோன்றியது.“ என்று சாஜல் காயல் (41) கூறுகிறார். “காற்றின் சத்தம் மிகுந்த அச்சமாக இருந்தது. அதிக சத்தத்துடன் கத்துவதுபோல் இருந்தது. அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகள் ஆடத்துவங்கிவிட்டன. அதை யாரோ உடைக்க முயல்வதுபோல், சத்தம்போட்டது. இரவு முழுவதும் 9 மணி நேரம் அப்படியே சென்றது. நாங்கள் எல்லோரும் பயந்துவிடோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
நானும், எனது சகோதரர் காஜிலும் எங்கள் வீட்டின் கூரை பறந்துபோய்விடாமல் இருக்க அதை பிடித்துக்கட்ட முயற்சி செய்துகொண்டிருந்தோம். எனது மனைவி, தாய், சகோதரரின் மனைவி ஆகியோர் ஜன்னலை பிடித்துக்கொண்டனர். 75 வயதான எனது தந்தை கதவை பிடித்துக்கொண்டார். எங்கள் குழந்தைகளை (5 வயது ஆண் மற்றும் 3 வயது பெண்) வீட்டிற்குள் ஒளிந்துகொள்ள அறிவுறுத்தினோம். நாங்கள் வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்தால், நிச்சயம் புயலில் சிக்கி இறந்திருப்போம்.
சாஜல் மற்றும் அவரது குடும்பத்தினர் அவ்வளவு முயன்றும் அவர்கள் வீட்டின் கூரை பறந்து சென்றுவிட்டது. ஜன்னல் கதவுகள் உடைந்து, மழை வெள்ளம், உடைந்த மரக்கிளைகள் மற்றும் பூச்சிகளை வீட்டிற்குள் கொண்டுவந்துவிட்டது. அம்பன் ‘மிகக்கடுமையான புயல்‘ ஆக வகைப்படுத்தப்பட்டது. மேற்கு வங்க கடற்கரை பகுதியில் அது கரையை கடந்தது. 2020ம் ஆண்டு மே 20ம் தேதி, 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூரைக்காற்று 165 கிலோமீட்டர் வேகம் வரை சென்றது. அம்பன் புயலால் கிராமப்புற பகுதிகளில் ஏற்பட்ட சேதம், குறிப்பாக சுந்தர்பான்ஸ் பகுதிகளில் அளவிட முடியாத அளவிற்கு கடினமானது. வடக்கு மற்றும் தெற்கு இரண்டு 24 பார்கனாசும் கடுமையாக தாக்கப்பட்டிருந்தது. மாநில அளவில் மே 29, 2020ன்படி இறப்பு எண்ணிக்கை 98ஆக இருந்தது.



புயலின் மையத்தில்
மேற்குவங்கத்தின் 24 தெற்கு பாரகன்ஸ் மாவட்டத்தில் கங்குரா உள்ளது. அதுவே புயலால் கடுமையாக தாக்கப்பட்ட பகுதியாகும். புயலின் பின்விளைவாக கடுமையான காற்று மற்றும் கடும் மழைப்பொழிவையும் எதிர்கொண்டது. “நாங்கள் இதற்கு முன்னர் கூட புயலை அனுபவித்திருக்கிறோம். ஆனால், இதுபோல் கிடையாது. 2009ல் ஐலா புயல் சில மரங்களை வீழ்த்தியது. ஆனால், அது மூன்று மணி நேரத்தில் ஓய்ந்துவிட்டது. புயல் மிட்னாப்பூர் மாவட்டம் வழியாக சுந்தர்பான்சை கடந்து பங்களாதேஷ் சென்றடையும் என்று பொதுவாக நாங்கள் எதிர்பார்த்தோம்.“ என்று சாஜல் கூறுகிறார்.
சாஜல், காங்குரா கிராமத்தில் பிறந்தவர். அங்கேயே அவரது வாழ்க்கை முழுவதும் வாழ்ந்தவர். அவரது 75 வயதான தந்தை சுதர்சன் காயல் கூட அம்பன் போன்ற கடுமையான புயலை நினைவு கூறவில்லை என்று அவர் கூறுகிறார். மேற்குவங்கம் வழியாக கடுமையான சீற்றத்துடன் 2020ம் ஆண்டு மே 20ம் தேதி வீசிய புயல், ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று (மாநிலத்தால்) அளவிடப்பட்டுள்ளது.



கங்குரா கிராமம் வழியாக வீசிய புயலின் கடுமைக்கு அங்குள்ள ஒவ்வொரு வீடும் சாட்சியாகும். அதில் 357 வீடுகளும், 1,456 பேரும் பாதிக்கப்பட்டனர். கங்குராவில் உள்ள பெரும்பாலானவர்கள் 491 பேர் தலித் ஆவார்கள். அவர்களுக்கு ஒரு ஏக்கருக்கும் குறைவான சொந்த நிலமே உள்ளது. பிழைப்புக்கு பண்ணைத்தொழில் செய்பவர்களாகவும் உள்ளனர். அவர்களின் பயிர்களும் புயலால் அழிக்கப்பட்டது. தேங்காய், மாங்காய் மற்றும் பனை மரங்கள், கிராமத்தினருக்கு கூடுதல் வருமானத்தை வழங்கியது. அவை அனைத்தும் வேரோடு சாய்ந்துவிட்டது. அவையும் ஒட்டுமொத்த இழப்புகளோடு சேர்கிறது.
இங்குள்ள பால்டா பகுதியில் உள்ள பேனா, பிளாஸ்டிக் மற்றும் துணி தொழிற்சாலைகளுக்கு கூலித்தொழிலாளர்கள் கங்குராவில் இருந்துதான் வருவார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் போடப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டதை அடுத்து, தொழிலாளர்கள் கங்குராவுக்கு திரும்பியிருந்தனர். வருமானத்திற்காக அவர்கள் முற்றும் முழுதாக விவசாய வேலைகளை மட்டுமே நம்பியிருந்தனர்.
“எனது பாசிப்பயறு பயிர் முழுவதும் அழிக்கப்பட்டது. செடிகள் அனைத்தும் இரண்டடி அளவு வளர்ந்து, அறுவடைக்கு தயாராக இருந்தது. தற்போது அவை தண்ணீர்ல் மூழ்கியிருக்கின்றன“ என்று கொங்கன் ராய்(49) கூறுகிறார். அவரின் 2.4 ஏக்கர் (6 பிகா) பயிர்கள் மற்றும் விவசாய நிலம் முற்றிலும் நீரில் மூழ்கியது. கிராமத்தில் உள்ள மற்றவர்களைப்போல், அவரும் காலிபிளவர், முட்டைகோஸ், ஆண்டு முழுவதும் நெல் பயிரிடுருவார். அவற்றை விற்பதன் மூலம் மாதம் ரூ.9 ஆயிரம் வருமானம் பெற்றார். “ எனது மாமரங்கள் அழிந்துவிட்டன. எனது வீட்டின் கூரை இடிந்துவிழுந்துவிட்டது. நான் எப்படி சமாளிக்கப்போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை“ என்று அவர் கூறுகிறார்.
லட்சுமி சான்ட்ரா (47), பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். “ எனது வீடு நீரில் மூழ்கிவிட்டது. நான் வேறு ஒருவர் வீட்டில் வசிக்கிறேன். எனது பயிர்களும் பாழாகிவிட்டன.“ என்று அவர் கூறுகிறார். அவர் நெல்லும், பாசிப்பயிரும் அவரது 0.8 ஏக்கரில் (2 பிகா) பயிரிட்டிருந்தார். அவை அவருக்கு ஆண்டு ரூ.25 ஆயிரம் வருமானம் தரும். லட்சுமி அதே கிராமத்தில் உள்ள துணித்தொழிற்சாலையில் வேலை செய்கிறார். ஊரடங்கு துவங்கி, அந்தப்பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்படுவதற்கு முன்னர் வரை அதன் மூலம் மாதம் ரூ.7 ஆயிரம் வருமானம் ஈட்டி வந்தார். “எதிர்காலத்திற்கு எனக்கு என்ன உள்ளது என்று எனக்கு தெரியவில்லை“ என்று அவர் மேலும் வருந்துகிறார்.

ஈரக்கூரைகளுடன் மண் வீடுகளும், சிமெண்ட் வீடுகளும் சேதமடைந்துள்ளன. இந்த நிருபர் அங்குள்ள குடிமக்களை சந்தித்து பேசிய ஜீன் 1ம் தேதி அன்று, மின்கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்து, கிராமத்தில் அப்போது மின்சாரம் இல்லை. ஒரு மண் வீடு கட்டுவதற்கு ரூ.ஒரு லட்சமும், சிமெண்ட் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சத்திற்கு மேல் செலவாகும் என்று உள்ளூர்வாசிகள் மதிப்பிட்டுள்ளனர்.
“எனது வீடு முற்றிலும் இடிந்து விழுந்துவிட்டது. கூரை பறந்துவிட்டது. பெரும்பாலான சுவர்கள் உடைந்துவிட்டன“ என்று மவுமித்தா பிரமானிக் (29) கூறுகிறார். அவர் கங்குராவில் உள்ள தியாஸ் ஆரம்ப பள்ளியின் ஆசிரியர். அவரது வருமானம் ரூ.2 ஆயிரம்தான், அவரது கணவர் பிலாஸ் பிரமானிக் வேலையிழந்தபின் 5 பேர் கொண்ட அவரது குடும்பத்திற்கு உதவுகிறது. “ எனது கணவர், இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேனா தொழிற்சாலையில் பணிபுரிந்தார். ஊரடங்கால் தொழிற்சாலை மூடப்பட்டது. அவருக்கு வேலை இல்லை. நாங்கள் அவரது வருமானம் ரூ.5,500 இல்லாமல் கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தோம். இந்நிலையில் நாங்கள் வீட்டையும் இழந்துவிட்டோம்.“ என்று அவர் கூறுகிறார்.
மவுமித்தா பணிசெய்யும் துவக்கப்பள்ளியும் புயலால் சேதமடைந்துவிட்டது. தடுப்புச்சுவர் இடிந்து கீழே விழுந்துவிட்டது என்று அவர் கூறுகிறார். “கோவிட் – 19க்கு நிவாரணம் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கும் மையமாக பள்ளி மாற்றப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் ரேஷன் பொருட்களை உள்ளே வைத்திருந்தோம். அவை சேதமடையவில்லை. ஆசிரியர்கள் பள்ளிக்கு, பாடத்திட்டங்கள் வகுப்பதற்காக வந்து கொண்டிருந்தனர். அதை அவர்கள் வாட்சப் மூலம் மாணவர்களுக்கு அனுப்புவார்கள். தற்போது புயலால் அப்பணிகள் தடைபட்டுவிட்டன.“ என்று அவர் மேலும் கூறினார்.



“தொழிற்சாலை தொழிலாளர்கள் மட்டும் வருமானமின்றி கஷ்டப்படவில்லை. நான் ரிக்சா இழுக்கும் தொழிலாளி மற்றும் சில நேரங்களில் தினக்கூலி வேலைகள் செய்துவருகிறேன். ஆனால் தற்போது எனக்கு வேலையும் இல்லை. வருமானமும் இல்லை“ என்று கணேஷ் மண்டல் (49) கூறுகிறார். அவரது மனைவி மற்றும் 5 வயது மகனையும், தனது மாத வருமானம் ரூ.6 ஆயிரம் மூலம் காப்பாற்றி வந்தார். தற்போது அம்பன் அவர்களின் வீட்டையும் எடுத்துக்கொண்டது. “எனக்கு வீட்டை சரிசெய்வதற்கு கூட வழியில்லை“ என்று அவர் கவலையுடன் கூறுகிறார்.
புயல் முடிந்த பின்னர் அரசு, சுவரும், மேற்கூரையும் இல்லாத வீடுகளுக்கு பிளாஸ்டிக் ஷீட்களை கொடுத்தது. “ நாங்கள் எனது வீட்டைச்சுற்றி பிளாஸ்டிக் ஷீட் வைத்துள்ளேன். அப்போதுதான் அது வீடு போன்ற தோற்றமாவது கொடுக்கிறது. எனது வீட்டின் கூரை எப்படியோ தாக்குபிடித்துவிட்டது. ஆனால், சுவர்கள் தான் சேதமடைந்தவிட்டன. “ என்று ஜசிமுதீர் மீர் (34) கூறுகிறார். அவர் துணி தொழிற்சாலையில் வேலை செய்கிறார்.
ஒரே ஒரு பிகா (0.4 ஏக்கர்) நிலமும் நீரில் மூழ்கியுள்ள நிலையில், அங்கூர் பாலா காயல் (55), மொத்தத்தையும் இழந்து கடுமையான வறுமையில் வாடுகிறார். “நான் தனியாக இருக்கிறேன். எனது கணவர் 12 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். எனக்கென்று சொந்தமாக எதுவும் கிடையாது. எனது வீடு இடிந்து விழுந்துவிட்டது.“ என்று அவர் கூறுகிறார். அவரது பாசிப்பயறு மற்றும் நெற்பயிர் முழுவதும் சாய்ந்துவிட்டது. அவரது ஒரு பசுமாடு அடுத்து சில மாதங்களுக்கு அவரை காப்பாற்றும் என்று அவர் நம்புகிறார்.





புயலுக்கு முன்னர் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். ஆனால், தங்கள் வீடுகளை காப்பாற்ற முயன்ற 15 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக உள்ளூர்காரர்கள் கூறுகிறார்கள். அவர்கள் தற்போது வைர துறைமுகத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அம்மருத்துவமனை கங்குராவில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மே 23ம் தேதி, வான்வழியாக புயலினால் ஏற்பட்ட பேரழிவை கணக்கிட்டு, மத்திய அரசு ரூ.ஆயிரம் கோடி நிவாரணம், மாநிலத்துக்கு அறிவித்துள்ளதாக சாஜல் கூறுகிறார். “நாங்கள் எங்கள் கிராமத்தை மீண்டும் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறோம். மேற்குவங்க மக்களுக்கு மத்திய அரசு இந்த நிதியுதவி வழங்குவது நல்லது. எங்களுக்கான நிதி உதவி கிடைப்பதற்காக காத்திருக்றோம்.“ என்று அவர்கள் கூறுகிறார்கள்.
பிரியதர்சினி R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.
Editor's note
நிகிதா சட்டர்ஜி, பெங்களூரில் உள்ள அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் உள்ள வளர்ச்சி ஆய்வுகள் முதுநிலை படிக்கும் மாணவி. அங்கு அவர் பாரியின் ‘கிராமப்புற இந்தியாவின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரம்‘ என்ற தலைப்பிலான அமர்வில் கலந்துகொண்டார். ஊரடங்கு காலத்தில் கொல்கத்தாவில் வீட்டில் இருந்தபோது, அவர்தான் முதலில், கங்குராவில் அம்பன் புயலால் ஏற்பட்ட அழிவுகளை பார்வையிட்டார். புயலைப்பற்றி எழுதும்போது, இயற்கை பேரிடரால் ஏற்பட்ட அழிவை பார்க்க வைத்தது. மேலும் அங்குள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்த பின்னரும் தொடர்ந்து செல்வதையும்