
“பைக்கில் வரும் போது எனக்கு குளிர் அடித்தது. நான் என்னுடைய இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தேன்: வெயில் அடிக்கும் போது முன்னாலும் மற்ற நேரங்களில் அம்மா அப்பாவிற்கு இடையிலும் அமர்ந்திருந்தேன்”, என்று 9 வயது அஷ்பிரீத் கவூர் ஒரே மூச்சில் உற்சாகமாக பேசினார். ஜனவரி 26ம் தேதி திட்டமிடப்பட்ட டிராக்டர் பேரணியில் கலந்து கொள்வதற்காக அஷ்பிரீத் தனது மூத்த சகோதரி மற்றும் பெற்றோருடன் சிங்குவில் உள்ள போராட்ட களத்திற்கு வந்தார். பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்திலுள்ள உச்ச தக்கலா கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான லக்வீர் சிங் மொத்த குடும்பத்தையும் தனது மோட்டார் பைக்கில் இரண்டு நாட்களில் 400 கி. மீக்கு மேல் பயணித்து கூட்டி வந்துள்ளார்.

குர்தாஸ்பூர் மாவட்டத்திலுள்ள குடத்பூரில் உள்ள சுவாமி ஸ்வரூபானந்த் சென் செக் நினைவு பள்ளியில் அஷ்பிரீத் 4ஆம் வகுப்பு பயின்று வருகிறார். “நானும் எனது தோழிகளும் இப்பேரணியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம், இறுதியாக எனக்கு வர வாய்ப்பு கிடைத்தது” என்று அஷ்பிரீத் கூறினார். அவரது தோழிகளும் டிராக்டர் பேரணிக்கு வர திட்டமிட்டுள்ளனர்.
மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைத்து கடந்த 2020 நவம்பர் 26 முதல் தில்லியின் எல்லையில் உள்ள சிங்கு, திக்ரி, மற்றும் காசிப்பூர் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 26, 2021 அன்று விவசாயிகள் திட்டமிட்ட பாதைகளில் டிராக்டர் பேரணி நடத்தி வரலாற்றை உருவாக்கப் போகின்றனர். மத்திய தில்லியில் உள்ள ராஜ்பாத்தில் அதிகாரப்பூரவ அணிவகுப்பு முடிந்த பின்னர், மதிய வேளையில் சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய மூன்று எல்லைகளிலிருந்து அப்பேரணி கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
“மக்கள் எங்களிடம் நாங்கள் எங்களது மகள்களை ஏன் போராட்ட களத்திற்கு கூட்டிக்கொண்டு வந்தோம் என்று கேட்கினறனர் – எனது மகள் அஷ்பிரீத் கூறியதால் மட்டுமே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்”, என்று கூறினார் லக்வீர். அவர் அஷ்பிரீத்தின் பள்ளி தாளாளரிடம் பேசி அவர்களது குடும்பம் 10க்கும் மேற்ப்பட்ட நாட்கள் வெளியில் செல்ல இருப்பதாக கூறினார். அவரும் எனது கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிலைமையை அவரும் அறிந்திருந்தார், என்று கூறினார்.
இக்குடும்பம் தில்லி – ஹரியானா எல்லையிலுள்ள சிங்கு போராட்டக்களத்தை தேர்வு செய்தது, மேலும் 39 வயதாகும் லக்வீர் தனது பஜாஜ் பிளாட்டினா மோட்டார் பைக்கில் தனது குடும்பத்தை அழைத்து வந்தார். அவர்கள் ஃபத்தேகர் சாஹிப்பில் இரவைக் கழித்தனர், வழியில் சுங்கசாவடியில் உள்ள லங்கரில் சாப்பிட்டார்கள்.
குர்தாஸ்பூர் மாவட்டத்தின் டோரங்கலா வட்டத்தின் உச்ச தக்கலாவில் இக்குடும்பத்திற்கு சொந்தமான 4 ஏக்கர் நிலமுள்ளது. “நாங்கள் பருவத்திற்கு ஏற்றவாரு கோதுமை மற்றும் நெல் சாகுபடி செய்து வருகிறோம். எங்களிடம் காய்கறி தோட்டமும் உள்ளது, அதில் எங்கள் குடும்பத்திற்கு தேவையான மஞ்சள், கொத்தமல்லி மற்றும் எள், மருதாணி மற்றும் வீட்டிற்கு தேவையானவைகளை விளைவிக்கின்றோம். இந்தத் தோட்டத்தை எனது மகள்கள் தான் கவனித்து வருகின்றனர்”, என்று அஷ்பிரீத்தின் தாயாரான பல்ஜீத் கவூர் கூறினார்.
ஒரு விவசாய குடும்பத்தில் அனைவருமே விவசாயிகள்தான். எனது மகள்கள் வயலுக்கு சாப்பாடு கொண்டு வருவார்கள், மேலும் விதைப்பு துவங்குவதற்கு முன்பு மாட்டு சாணம் மற்றும் உரங்களை வயலில் இடுவதற்கு உதவுகிறார்கள், அறுவடையின் போது அறுக்கப்பட்ட கதிர்களைக் கட்ட உதவுகிறார்கள் மேலும் மாட்டுத்தீவனத்திற்கு புல் அறுப்பார்கள். மொத்த குடும்பமும் இந்த வயலில் வேலை செய்வோம்”, என்று அவர் கூறினார்.




36 வயதாகும் பல்ஜீத் நீண்ட பைக் பயணத்தால் தனது மூட்டில் வலிப்பதாக கூறுகிறார், குளிர்ந்த காற்றும் தாங்குவதற்கு கடினமாக இருந்தது என்று கூறுகிறார். பஞ்சாப் கிசான் யூனியன் ஏற்பாடு செய்திருந்த தள்ளுவண்டியில் தங்கியதற்கு அவர் நன்றி உள்ளவராக இருந்தார். நீண்ட நெடும் பயணத்திற்கு பிறகு நாங்கள் மிகவும் சோர்வடைந்து இருந்தோம் அந்த வண்டியில் ஏறிய உடனே நாங்கள் தூங்கி விட்டோம். மூன்று பக்கமும் மூடி இருப்பதால் குளிர் காற்று உள்ளே வரவில்லை. ஒரு போர்வையை கீழே விரித்து இரண்டு போர்வையை வைத்து மூடிக் கொண்டோம். சிங்குவிற்கு வந்த உடனேயே எங்களது துணிகளை சலவை இயந்திர சேவை வழங்கும் இடத்தில் சுத்தம் செய்தோம். போராட்டகளத்தில் எல்லாமே ஏற்பாடு செய்யப்பட்டு தயாராக இருந்தது மேலும் கழிவறைகள் சாலையின் எதிர்புறத்தில் உள்ள கட்டிடத்தில் அமைக்கப்பட்டு இருந்தது.
அஷ்பிரீத்தின் 15 வயது சகோதரி ஜஷ்கரன் ப்ரீத் கவூர் குர்தாஸ்பூரில் உள்ள மஹர் முடியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தனது எதிர்காலம் விவசாயத்தை சார்ந்து இருப்பதாகக் கூறுகிறார் : நான் ஒரு விவசாயியாக விரும்புகிறேன் ஏனென்றால் எங்களால் தான் அனைவருக்கும் சாப்பிட உணவு கிடைக்கும்”, என்று அவர் கூறுகிறார். ஜஷ்கரன் அவர்களது காய்கறி தோட்டம் முழுவதையும் கவனித்துக் கொள்வதாக அவரது தாயார் கூறுகிறார்.
நான் எங்களது உரையாடலை குறிப்பு எடுப்பதைப் பார்த்த ஜஷ்கரன்: “நானும் எழுதுவேன் நான் எழுதியிருப்பதை உங்களுக்கு காட்டி இருப்பேன் ஆனால் என்னுடைய டைரி இப்போது என்னிடம் இல்லை. மோட்டார் பைக்கில் இடமில்லாததால் என்னுடன் எந்த புத்தகத்தையும் கொண்டுவர முடியவில்லை. நான் ஒரு ப்ராஜெக்ட் செய்யலாம் என்றிருக்கிறேன் – 32 உழவர் சங்கங்களின் அனைத்து தலைவர்களின் பெயர் மற்றும் அவர்களது பங்களிப்பை விளக்கும் விதமாக ஒரு மரம் செய்ய திட்டமிட்டுள்ளேன்”, என்று கூறினார்.
ஜனவரி 26 அன்று லக்வீர் தனது மோட்டார் பைக்கை பயன்படுத்தி பேரணியில் டிராக்டர்களுக்கு கேன்களில் பெட்ரோல் வழங்க வேண்டியிருந்தது, மேலும் அவரது குடும்பத்தினர் பேரணியில் பங்கேற்க முடியவில்லை. அஷ்பிரீத் ஏமாற்றமடைந்தார், ஆனால் டிராக்டர்களின் பேரணியைப் பார்த்து மகிழ்ந்ததாகக் கூறுகிறார்.

லக்வீர் மற்றும் பல்ஜீத் ஆகியோர் தாங்கள் குடும்பமாக பங்கேற்க விரும்பியதாகக் கூறுகின்றனர். “உங்களையும் என் மகளையும் போன்ற வருங்கால சந்ததியினரின் நலன்களை பாதுகாக்க நாங்கள் விரும்புகிறோம்”, என்று கூறினார் லக்வீர். “தனியார்மயமாக்கலுக்கு பிறகு நமது கல்விமுறைக்கு என்ன நேர்ந்தது என்பது எங்களுக்குத் தெரியும் – அரசு வேலைகள் இல்லாததால் தனியார் வேலைகளைப் பெற தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. இப்போது நாம் இதை எதிர்க்காவிட்டால் விவசாயத்திற்கும் இதே நிலைதான் ஏற்படும்”.
அவர்களின் ஆண்டு வருமானம் சராசரியாக 2.5 லட்சம் ரூபாய் தனியார் மண்டிகளின் வருகையால் அது மேலும் குறையும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர் மேலும் அதிக கட்டணத்திற்கு நாங்கள் உணவு தானியங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அஞ்சுகின்றனர் அவரது பயம் அனைத்தும் மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களினால் ஏற்பட்டுள்ளது. அவ்வேளாண் சட்டங்களாவன – விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020; வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020; அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020. வேளாண் சட்டங்கள் முதலில் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி அவசரச் சட்டமாக கொண்டுவரப்பட்டது, பின்னர் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று பாராளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களாக அறிமுகப்படுத்தப்பட்டது, எதிர்ப்புகளையும் மீறி அந்த மாதம் 20-ஆம் தேதிக்குளாகவே அது சட்டமாக்கப்பட்டது.

விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் மீது பெரு நிறுவனங்களுக்கான அதிகார பரப்பை மேலும் இச்சட்டங்கள் அதிகப்படுத்தும், அது விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் அனைவரும் பார்க்கின்றனர். மேலும் இச்சட்டங்கள் விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு, மாநில கொள்முதல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய முக்கியமான ஆதரவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. இந்திய அரசியலமைப்பின் 32வது பிரிவை குறை மதிப்பிற்கு உட்படுத்தி அனைத்து குடிமக்களுக்கும் சட்டரீதியான உதவிக்கான உரிமையை முடக்குகிறது என்பதால் ஒவ்வொரு இந்தியருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இச்சட்டங்கள் விமர்சிக்கப்படுகின்றன.
இக்குடும்பத்தினர் தங்களது வீட்டை பூட்டி விட்டு இப்பேரணிக்கு வந்துள்ளனர். “கிராமத்தில் யாரும் அவ்வாறு அவர்களது வீடுகளை பூட்டிவிட்டு வெளியே செல்வதில்லை. யாராவது எப்போதும் வீட்டில் இருப்பதற்காக தங்களது நேரத்தை கொஞ்சம் மாற்றிக் கொள்வார்கள். ஆனால் இந்த முறை நாங்கள் அதைப் பற்றி எதுவும் கவலைப்படவில்லை யாராவது எங்களது வீட்டில் கொள்ளை அடிக்க விரும்பினால் அவர்கள் செய்து கொள்ளலாம்; எப்படி இருந்தாலும் இந்தக் “கருப்புச் சட்டங்கள்” போகாவிட்டால் என்ன மிஞ்சி இருக்கும்?” என்று கேட்கிறார் லக்வீர்.
போராட்டத்திற்கு கிளம்புவதற்கு முன்பு புதியதாக நடப்பட்ட கோதுமை பயிர்களுக்கு நீர்ப் பாசனம் செய்ய மோட்டாரை துவக்கினேன் என்று கூறுகிறார். வரும்காலம் அவருக்கு நல்ல அறுவடையை மட்டும் தருவதல்லாமல் அவரது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த புதிய வேளாண் சட்டங்களும் நீக்கப்படும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார். “இந்த குழந்தைகளுக்காகத் தான் இச்சட்டங்களை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம்”, என்று அவர் கூறுகிறார்.
இந்தக்கதை முதலில் பிப்ரவரி 12 2021 இல் வெளியிடப்பட்டது, மேலும் அதில் சில பெயர்கள் தவறாக எழுதப்பட்டு இருந்தன. பிழைக்கு வருந்துகிறோம்.
Editor's note
சௌமியா தாக்கூர் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் BBLLB 4 ஆம் ஆண்டு பயின்றுவருகிறார். அவர் விவசாய குடும்பத்தில் இருந்து வருகிறார் மேலும் மாணவர் செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார் - பாலின உணர்திரன் மற்றும் குடியுரிமை ஆகிய தளங்களில் செயல்பட்டு வருகிறார். “சட்டீஸ்கரில் உள்ள எனது வீட்டில் இருந்து சிங்கு போராட்ட களத்திற்கு இப்போராட்டத்தினை பதிவு செய்வதற்காக நான் வந்திருக்கிறேன். சிங்குவில் நடந்த பஞ்சாப் கிசான் யூனியனுக்கான கூட்டத்தில் இக்குடும்பத்தைப் பற்றி கேள்விப்பட்டேன் அவர்களைப் பற்றி எழுத விரும்பினேன். நான் திரு பி. சாய்நாத் எழுதிய Everybody loves a good drought புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன் மேலும் அதன் மூலம் நானும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி எழுத வேண்டும் என்னும் உத்வேகம் கிடைக்கிறது”, என்று அவர் கூறுகிறார்.
தமிழில்: சோனியா போஸ்
சமூகவியல் முதுநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.