
தேர்வு போட்டிக்கு தயாராகும் ஷபிர் அகமது
ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் இது வசந்த காலம் என்பதால் ஒளி மேகங்கள், தெளிந்த நீல நிற ஏப்ரல் வானில் நகர்கின்றன. ஸ்ரீநகரின் சோலினா வட்டாரத்தில் உள்ள தனது மூன்றடுக்கு மாடி வீட்டின் முற்றத்தில் 35 வயதாகும் அரசு ஊழியர் நிற்கிறார். புறா ஆர்வலலரான (காஷ்மீரி மொழியில் கோதார்பாஸ் ) ஷபிர் தான் வளர்த்த புறாக்களை பந்தயங்களுக்கு தயார்படுத்துகிறார்.
“அவற்றிற்கு கருமேங்கள் பிடிக்காது. இங்கு குளிர்காலம் கடுமையாக இருக்கும் என்பதால் நவம்பர் வரை அவை வெளியே வருவதில்லை,” என்கிறார். கூண்டுக்குள் இருந்து பறவைகள் வெளியேறுகின்றன, சில மட்டும் மூங்கில் கழிகளில் அமர்கின்றன. சுமார் 8 முதல் 10 அடி நீளமுள்ள வளைந்த மூங்கில் குச்சியை பிடித்தபடி ஷபிர் அங்கு கட்டப்பட்டுள்ள கிடைமட்ட கம்புகளை நோக்கி ஓடுகிறார். அங்கு கட்டப்பட்டுள்ள கம்புகளை வேகமாக சிறிது நேரம் தட்டுகிறார். அது அங்கு விரைவில் தொடங்க இருக்கும் பந்தய காலத்திற்கு தயாராக, ஓய்வெடுக்கும் பறவைகளின் கால் நகங்களில் லேசாக படுகின்றன.

ஷபிர் பேசிக் கொண்டிருக்கும் போதே புறாக்களில் ஒன்று வெள்ளி மேகங்களை நோக்கி பறக்கிறது. வட்டமிடும் பருந்து துரத்துவதற்காக கீழே வருகிறது. பருந்து துரத்தினாலும் புறா தொலைவில் தான் உள்ளது. அவர் தொடர்ந்து சீட்டி அடிக்கிறார். “சீட்டியை அபாய மணியாக புறா புரிந்து கொள்கிறது. புறாக்கள் உயர பறக்க, பருந்துகள், கழுகுகள் தாக்கும் ஆபத்தும் அதிகமாகிறது,” என்று அவர் விளக்குகிறார். புறாக்களை அமைதியாக நாங்கள் கவனித்துக் கொண்டிருந்தோம். 400 பறவைகளில் ஒன்று அல்லது அதற்கும் அதிகமான புறாக்கள் ஷபிருக்கு சொந்தமானதாக இருக்கக்கூடும். அவை மெதுவாக நம்மை நோக்கி திரும்புகின்றன.
அவர் அமைத்து வைத்துள்ள மூங்கில் கட்டங்களுக்குள் பல்வேறு நிறத்திலான, வகையிலான புறாக்கள் அமர்கின்றன. “சில இனங்களுக்கு காஷ்மீரி பெயர்கள் உள்ளன. சிலவற்றிற்கு நானே பெயரிட்டுள்ளேன்: காலிவோசுல், சாக் சீன், தவுப், டெட்டி, ஸிரா, சஹரான்பூரி…” ஷபிர் அவற்றின் பெயர்களை சொல்லிக் கொண்டே மேல் அலமாரியை திறந்து சோள சாக்குப்பையை எடுக்கிறார். காலை, மாலை என ஒருநாளுக்கு இருமுறை உணவாக அவை கொடுக்கப்படுகின்றன. கூண்டிற்குள் ஒரு வாளி நிறைய தண்ணீர் வைக்கப்படுகிறது. அது அவ்வப்போது மீண்டும் நிரப்பப்படுகிறது.
ஷபிர் போன்ற புறா ஆர்வலர்கள் புறாக்களை வளர்ப்பதற்கு, மாதம் ரூ.5000 முதல் 10,000 வரை செலவிடுகின்றனர். உலர் பழங்கள், சமைக்காத கொண்டைக்கடலைகள், கடுகு எண்ணெய், புரதம் நிறைந்த உபஉணவுகளை சேர்த்து உணவாக அவர் தருவதால் பந்தயத்திற்கு தயாராக தேவையான வலிமையை அவை பெறுகின்றன.


முகமது சல்மானும் ஒரு புறா ஆர்வலர். ஸ்ரீநகரின் டால்கேட் பகுதியில் தெருவோர வியாபாரியாகவும் இருக்கிறார். அவரது குடும்பம் 1980களின் பிற்பகுதியிலிருந்து இப்பறவைகளை வளர்க்கின்றனர். வெற்றியாளர்களை தயார் செய்வதற்கு தொடர் முயற்சி தேவைப்படுகிறது. “பந்தயத்திற்கு தயாராக ஆறு மாதங்கள் ஆகிறது,” என்கிறார் முகமது. “குளிர்காலத்தின் உச்சத்தில் கூண்டிற்குள் இதமான சூழலில் புறாக்கள் முட்டையிட்டு குஞ்சுப் பொறிக்கின்றன. ஆண்டுதோறும் எனக்கு சுமார் 100 புறா குஞ்சுகள் கிடைக்கும். அனால் போட்டிக்கு எல்லாம் தகுதி பெறுவதில்லை.” போட்டி காலத்திற்கு முன்பு பறக்கும் தேர்வின் அடிப்படையில் புறாக்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
புறாக்களால் வீடு திரும்புவதற்கு முன் பல மணி நேரங்கள் பறக்க முடியும். ‘வீடடைதல்’ எனும் முறையை பழக்கப்படுத்த சுமார் 40 நாட்கள் ஆகும் என்கிறார் முகமது. இதனால் அவை தொலை தூரம் பறந்து போகாமல் பாதுகாப்பாக வீடு திரும்புகின்றன. தகவல்களை எடுத்துச் செல்ல புறாக்கள் உதவுவது, ராணுவத்தில் அவற்றின் பங்கு போன்ற சிறிய விஷயங்களையும் முகமது போன்ற புறா ஆர்வலர்கள் அறிந்து வைத்துள்ளனர். பல மணி நேரம் உயர பறக்கும் திறன் கொண்ட புறாக்களின் வயிற்றில் கேமராக்களை பொருத்தி உளவு பணிகளுக்காக முதலாம் உலகப் போரின் போது ஜெர்மானிய ராணுவம் பயன்படுத்திக் கொண்டது.
வயது 70களில் உள்ள புகழ்பெற்ற காஷ்மீரிய கவிஞரும், வரலாற்றாளருமான ஸரீஃப் அகமது ஸரீஃப், பல தசாப்தங்கள் புறா பந்தய வழக்கத்தை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். அவர் சொல்கிறார், “நாங்கள் [காஷ்மீரிகள்] புறா வளர்ப்பை விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் செய்து வருகிறோம். முப்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம், ஒவ்வொரு மொஹல்லாவிலும்[அண்டை பகுதிகள்] குறைந்தது மூன்று முதல் நான்கு புறா ஆர்வலர்கள் இருப்பார்கள். பஞ்சாபிலிருந்து இந்த விளையாட்டை காஷ்மீரிகள் பெற்றனர்.” ஒரு காலத்தில் வெள்ளிக்கிழமை காலை தோறும் பள்ளத்தாக்கைச் சேர்ந்த சுமார் 50 புறா ஆர்வலர்கள் நவ்ஹட்டா நகர வட்டாரத்தில் உள்ள காக் மொஹல்லாவில் ஒன்று திரள்வார்கள். சந்தையில் பிடிபடும் புறாக்கள் மாற்றிக் கொள்ளப்படும் அல்லது விற்கப்படும் என்கிறார் அவர்.

திருமணமான பிறகு புறாக்கூண்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்ட மூத்த சகோதரர் ஃபயஸ் அகமது இந்த விளையாட்டை ஷபிருக்கு அறிமுகப்படுத்தினார். இதற்கான காரணத்தை ஸரீஃப் விளக்குகிறார்: “புறாக்கள் பறக்கும்போது [உற்சாகத்தில்] அவற்றை கவனித்தபடி தங்களின் வீட்டுக் கூரைகளில் இருந்து கீழே விழும் ஆபத்து இருக்கும் என்பதால் இளம் திருமணமான தம்பதிகள் புறா ஆர்வலர்களாக இருக்க தயங்குகின்றனர். இந்த விளையாட்டை சமூகம் எப்போதுமே ஏற்பதில்லை.”
வானை உற்று நோக்கிய ஷபிர் அதிகம் விரும்பப்படும் காலிவோசுல் எனும் சிவப்பு தலை கொண்ட வெள்ளைப் புறா வகையை பார்க்கிறார். “அது வேறு ஒருவரால் வளர்க்கப்படுகிறது,” என்கிறார் அவர். புறா சற்று தாழ பறக்கிறது, சில நிமிடங்களில் சோர்வடைந்து ஷபிர் வைத்துள்ள கூண்டு கம்பிகளில் ஒன்றின் மீது அமர்கிறது. இதை வாய்ப்பாக எடுத்துக் கொண்ட ஷபிர் அப்பறவையிடம் குச்சியை நெருங்கி எடுத்துச் சென்று கழுத்தில் தளர்வான சுருக்கு போடுகிறார். தனது கூண்டிற்கு செல்லுமாறு அப்பறவையை நிர்பந்திக்கிறார். கண்டறிபவர்களே வைத்துக் கொள்பவர்கள்! இப்போது அப்புறா அவருக்கு சொந்தமானது. காஷ்மீரின் புறா வளர்ப்போர் மத்தியில் இப்பழக்கம் பொதுவானது. சில ஆர்வலர்கள் இந்த பயிற்சியை விரும்பினாலும், மற்றவர்கள் சொந்தப் பறவைகளை பாதுகாப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர்.
வேறு சில வழிகளிலும் ஆர்வலர்கள் தங்கள் பறவைகளை இழக்கின்றனர். அன்றைய தினம் புறாக்கள் வீடு திரும்பும்போது ஒன்று குறைவதை ஷபிர் கவனிக்கிறார். “சில சமயம் அடுத்தநாள் காயத்துடன் திரும்பும்,” என்கிறார் அவர் நம்பிக்கையுடன். சில சிறந்த புறாக்களை வேட்டையாடும் விலங்குகளிடம் அவர் இழந்துள்ளார். “இது தான் எங்கள் பரிசோதனையின் ஒரு பகுதி. பறவைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.”


பந்தயத்திலிருந்து விலகுதல்: சிவப்பு அட்டை எச்சரிக்கை!
முன்பெல்லாம் இப்பந்தயங்கள் ஒரு பறவை விளையாட்டாக காஷ்மீரில் பார்க்கப்பட்டது. ராணுவ நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்தபோது மக்களும் தங்கள் வீடுகளில் சிறைபடுத்திக் கொண்டனர். ஆர்வலர்கள் புறாக்களை வளர்த்து பயிற்சி கொடுத்தனர். பல்வேறு புறா இனங்களை பெருக்குபவர்களுக்கும், பந்தயக்காரர்களுக்கும் இடையே போட்டியும் இருந்தது. “சூரிய உதயத்தின்போது ஆர்வலர்கள் தங்கள் புறாக்களை பறக்கவிட்டு அவை திரும்பும் நேரத்தை குறிக்கின்றனர். அதிக நேரம் பறக்கும் புறாவை வெற்றி பெற்றதாக அறிவிக்கின்றனர்,” என்கிறார் ஷபிர்.
இன்று, புறா பந்தயம் உயர்ந்த விளையாட்டாக உள்ளது. சில பந்தயங்களில் அதிகபட்சமாக ரூ.30,000 பரிசுத் தொகை அல்லது மாருதி கார்கள் வரை பரிசளிக்கப்படுகின்றன.
சமூக ஊடகங்கள் குறிப்பாக பாகிஸ்தானிய புறா ஆர்வலர்களால் யூ டியூபில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால் புறா வளர்ப்பு புத்துணர்வு பெற்றுள்ளது. “பாகிஸ்தானிய ரசிகர்கள் உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளனர். மேலும் சமூக ஊடகங்கள் அவர்களின் பாணியை எங்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது,” என்று கூறியபடி தனது கைப்பேசியில் அதிகம் பார்க்கப்பட்ட புறா பந்தய வீடியோக்களை நகர்த்தியபடி காட்டுகிறார் ஷபிர். காஷ்மீர் போன்றில்லாமல் பாகிஸ்தானில் வெப்பநிலை அனுமதிப்பதால் ஆண்டு முழுவதும் பந்தயங்கள் நடைபெறுவதோடு இணையத்திலும் போட்டிகளின் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன.
“இவ்வகையில் , பந்தயம் என்பது குறிப்பிட்ட பகுதிக்குள் முடிவதில்லை. காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்ப நடத்தப்படுகிறது,” என்கிறார் 2019ஆம் ஆண்டு முதல், நடுவராக இருக்கும் சோலினாவைச் சேர்ந்த ஆர்வலர் அஃப்தாப் அஹமது, “எங்களைப் போன்ற ஆர்வலர்களிடையே நடுவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்”, என்கிறார். ஆர்வலர்களின் இடத்திற்கே செல்லும் அவர்கள் அதிகாலையில் ஒவ்வொரு கூண்டிற்கும் சென்று சிறந்த ஐந்து புறாக்களை பறக்கவிடச் சொல்கின்றனர். அவை வானில் பறப்பதை கவனித்து கூட்டாக அவை பறக்கும் நேரத்தை பதிவு செய்கின்றனர்.



புறாக்கள் தேர்வு செய்யப்பட்டு, பறப்பதற்கு முன்பு இறகுகளில், முத்திரைகளை நடுவர்கள் இணைக்கின்றனர். அவை கூண்டு திரும்பும் வரை பைனாக்குலரில் கவனிக்கின்றனர். சில சமயங்களில் போட்டியில் பங்கேற்காத புறாக்களையும் ஆர்வலர்கள் பறக்க விடுகின்றனர். இதனால் பந்தயப் புறாக்கள் அவற்றின் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. “நடுவர்களே இதை அனுமதிக்கின்றனர்,” என்கிறார் அஃப்தாப். “பந்தயப் புறா வேட்டையாடப்பட்டால் அல்லது காயமடைந்தால், போட்டியிலிருந்து நீக்கப்படுவதோடு, மாற்றுப் புறாவும் அனுமதிக்கப்படுவதில்லை. கால்பந்தாட்டத்தில் வழங்கப்படும் சிவப்பு அட்டையைப் போன்று.”
புறா போட்டியாளர்கள் புதிதாக வருவதால் ஆண்டுதோறும் புறா பந்தயம் விரிவடைந்து வருகிறது. ஒரேநேரத்தில் பல இடங்களின் மேற்கூரையில் பந்தயங்கள் நடைபெறுகின்றன. ஜூன் மாதத்தில் போட்டிகள் அதிகளவு நடைபெறுகின்றன. ஆனால் சரியான எண்ணிக்கையை தெரிவிக்கும் தரவுகள் எதுவுமில்லை. ஆண்டுதோறும் இதுபோன்ற 70 பந்தயங்கள் நடப்பதாக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு ஆர்வலர்கள் எல்லா பந்தயத்திலும் பங்கேற்கிறார்கள்.
ஸ்ரீநகரின் பழைய நகரில் ஷபிர் தனது மூத்த சகோதரரின் கைகளை பற்றிக் கொண்டு கூண்டிற்கு செல்ல தொடங்கி 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. “நான் பறவைகளுடன் உணர்வுப்பூர்வமாக பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்டேன். ஒரு தாயைப் போல அவற்றிற்கு உணவளித்து, அவை குஞ்சு பொறிப்பதையும், புறா குஞ்சுகள் பறக்க கற்பதையும் கவனிக்கிறேன். எதிரிகள் அவற்றை தாக்கி காயப்படுத்திவிட்டால், நீங்கள் தான் அவற்றை பராமரித்து நலப்படுத்த வேண்டும்,” என்கிறார் ஷபிர்.
“உண்மையான பறவை விரும்பிகள் பொழுதுபோக்காக அல்லது விருப்ப வேலையாக அவற்றை வளர்க்கின்றனர், ” என்று தனது புறாக்களை காட்டியபடி சொல்கிறார் முகமது. “ஒருமுறை கோப்பையுடன் 5000 ரூபாய்க்கான பரிசுத் தொகையையும் எனது ஆர்வலர் நண்பரிடமிருந்து பெற்றேன். எனக்கு பணம் ஒரு விஷயம் கிடையாது.” கடைசிப் பறவை திரும்பியவுடன் அவர் கவனமாக கூண்டின் கதவுகளை அடைத்து தாழிடுகிறார். “எனக்கு அவை குழந்தைகளைப் போலத்தான். ”
Editor's note
காஷ்மீர் ஸ்ரீ நகர் மகளிர் அரசுக் கல்லூரியில் மிர் யாசிர் முக்தார் தனது இளநிலை பத்திரிகை மற்றும் ஊடகத் தொடர்புத் துறை பட்டத்தை முடித்துள்ளார். புகைப்பட பத்திரிகையாளராகும் நோக்கத்தை கொண்டுள்ளார். “இத்தலைப்பில் நான் ஆராய்ச்சி செய்தபோது பறவைகள் போட்டிக்கு தயாராவது தொடர்பான அனைத்து விஷயங்களையும் கற்றேன். மிக நீண்ட காலம் தடைசெய்யப்பட்டு இருந்த இடத்தில் புறா-கலாச்சாரத்தின் துணைக் கலாச்சாரத்தைப் பற்றிய இந்தக் கதையை நான் முன்வைக்க விரும்பினேன். அமைதியின்றி, சச்சரவுகளிடையே வாழும் காஷ்மீரிகள் எவ்வாறு தங்கள் விருப்பத்தை பின்தொடர்கின்றனர் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற இத்தலைப்பை நான் தேர்வு செய்தேன்.”
தமிழில்: சவிதா
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.