துஷர் மனோஹர் சவான் 25 ஆண்டுகளுக்கு முன்னரே பள்ளி செல்வதை நிறுத்திவிட்டாலும், ஒவ்வொரு கல்வி ஆண்டும் மே மாதத்தில் பள்ளிகள் முடிவடைவதற்காகக் காத்திருப்பார். 

“இந்த நேரத்தில்தான் (மே மாதத்தில்) பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களின் கடந்த கல்வியாண்டின் பழைய நோட்டு மற்றும் புத்தகங்களை விற்பனை செய்வார்கள்“ என்று சவான் கூறுகிறார். புனேவைச் சேர்ந்த 42 வயதான சவான் பழைய நோட்டுப்புத்தகங்கள், புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் ஆகியவற்றை சேகரித்து விற்பனை செய்து வரும் தொழில் செய்கிறார். “பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் ஆன்லைனில் (2020-21) செயல்பட துவங்கியது முதல் ஒரு மாணவர் வருவதே அரிதாகிவிட்டது“ என்று 2021ம் ஆண்டு ஜுன் மாத இறுதியில் நான் அவரை சந்தித்தபோது கூறினார்.

மத்திய புனே கோக்கலே சாலையில் உள்ள அவரது 10க்கு 10 அடி கொண்ட கடை தகரத்தால் ஆனது. அதில் அழகாக அவர் செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களை அடுக்கி வைத்துள்ளார். மொத்தமாக புத்தகங்கள் மற்றும் பழைய செய்தித்தாள்கள் பின்புறத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. புதியவை சிறுசிறுக் கட்டுகளாக கட்டப்பட்டு கடைக்கும் வெளிப்புறம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடைக்கும் கீழே உள்ள அலமாரி போன்ற இடத்தில் ஒரு பெரிய பிளாஸ்டிக் மூட்டையில் பால் பாக்கெட்டுகள், சிறிய மாத இதழ்கள் கட்டுக்கு அருகில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

கடைக்கு முன்புறமாக பெரிய எடைபோடும் இரும்பு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் எளிதாக எடை போட்டுக்கொள்ளலாம். “நான் இந்த எடைபோடும் இயந்திரத்தை முன்புறத்தில் வைக்க விரும்பியதற்கு காரணம், எனது வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் பழைய புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் ஆகியவை எவ்வளவு எடை வருகிறது என்பதை காண்பிப்பதற்கு வசதியாக இருக்கும் என்றுதான். அது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்“ என்று அவர் கூறுகிறார். ஒரு பழைய மேடையின் மீது வைக்கப்பட்டுள்ள எடைபோடும் இயந்திரத்தில் 150 கிலோ வரை அளவிடலாம். 

சவான் அவரது கடையின் முன்புறம் அமர்ந்துகொள்கிறார். இதனால், அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் அவர் எளிதாக பேச முடியும். “நாங்கள் பழைய செய்தித்தாள்கள், புத்தகங்கள் மற்றும் பால் (பிளாஸ்டிக்) பாக்கெட்கள் ஆகியவற்றை சேகரிக்கிறோம். நான் தற்போது பழைய செய்தித்தாள் மற்றும் பால் பாக்கெட்டுகள் கிலோ ஒன்றுக்கு ரூ.20 கொடுக்கிறேன்.  பழைய புத்தகம் கிலோவுக்கு ரூ.10 கொடுக்கிறேன்“ என்று அவர் கூறுகிறார். நகரின் பழையப் பகுதிகளான சந்தை மற்றும் பவானி பெத் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் பெரியச் சந்தையில் என்ன விலைக்கு இந்தப் பழைய தாள்களை எடுத்துக்கொள்கிறார்களோ அதைப் பொறுத்துதான் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சிறிய டெம்போக்களின் சேவைகளை பயன்படுத்தி அவர் இந்த பழையத் தாள்களை வாரம் ஒருமுறை பெரிய சந்தைப்பகுதிகளுக்கு எடுத்துச்செல்கிறார். 

“பழைய தாள்களுக்கு, எனது வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதைவிட, நான் கிலோவுக்கு 5 ரூபாய் கூடுதலாக பெறுகிறேன்“ என்று அவர் கூறுகிறார். நான் அவரிடம் நீங்கள் எவ்வளவு லாபம் பெறுகிறீர்கள் என்று கேட்டபோது அவர் இதைச் சொன்னார். 

2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் போடப்பட்ட முதல் ஊரடங்கின்போது, செய்தித்தாள்கள் மூலம் வைரஸ் பரவும் என்ற வதந்தி பரவி, புனேவில் தினசரி செய்தித்தாள்கள் அச்சிடுவதே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. “செய்தித்தாள்களில் பணிபுரியும் நிருபர்கள் மற்றும் மற்ற பணியாளர்களை இது எவ்வாறு பாதிக்கும் என்றுதான் அனைவரும் பேசினார்களேயொழிய, எங்களை – அதாவது பழைய செய்தித்தாள்கள் விற்பவர்களை – எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து ஒருவரும் சிந்தித்துகூட பார்க்கவில்லை“ என்று சவான் கூறுகிறார்.

சில வாரங்களுக்குப்பின்னர் அச்சடிக்கப்பட்ட செய்திதாள்கள் வெளிவந்தன. ஆனால், செய்தித்தாள்கள் வைரஸ் கிருமியை பரப்பும் என்ற அச்சம் மட்டும் இருந்தது. “நான் வாங்கக்கூடிய பழைய செய்தித்தாள்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 70 சதவீதம் குறைந்தது“ என்று அவர் கூறுகிறார். அவருக்கு தற்போது ஒரு நாளில் 50 வாடிக்கையாளர்கள் கிடைத்துவிடுகிறார்கள். ஆனால், கோவிட் காலங்களுக்கு முன்னர் இது அதிகமாக இருந்தது. 

2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய அளவிலான ஊரடங்கின்போது அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சவானின் பழைய தாள்கள் கடையும் அந்த ஆண்டின் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மூடப்பட்டிருந்தது. புகைப்படங்கள் எடுத்தவர் சன்விதி ஐயர்

ஒரு பைக்கில் இரண்டு பேர் ஒரு சிறிய மூட்டையை எடுத்து வருகின்றனர். அந்த மூட்டையை வாங்கி சவான் எடைபோடும் இயந்திரத்தில் வைத்து எடையிடுகிறார். அது மூன்று கிலோ எடை காட்டுகிறது, அதற்கு கணக்கிட்டு ரூ.60ஐ  அந்தப் பழைய செய்திதாள்களுக்கு வழங்குகிறார். 

கடந்த 20 – 25 ஆண்டுகளாக அவரது தந்தை, கடை நடத்துவதை பார்த்து வளர்ந்து உடன் வேலை பார்த்ததை சவான் நினைவு கூறுகிறார். சில மாதங்களுக்கு முன்னர் அவரது தந்தை கோவிட்டால் இறந்துவிட்டார். சவானும் கடந்த ஆண்டு, இரண்டு முறை கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். “இரண்டாவது முறை நான் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன். எனக்கு நம்பிக்கையே இல்லை“ என்று அவர் கூறுகிறார். இரண்டு முறையும் நான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக நான் எந்த செலவும் செய்யவில்லை“ என்று அவர் மேலும் கூறுகிறார். சவான், அவரது தாய், மனைவி, சகோதரர் மற்றும் இளைய மகனுடன் அருகில் உள்ள கூட்டுறவு சங்க குடியிருப்பில் வசித்து வருகிறார்.

40 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கடையை வைத்த அவரது இறந்த தந்தை குறித்து பேசுவது அவருக்கு மிகக்கடினமாக உள்ளது. “எனது தந்தை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வீட்டிற்கு வந்தார். நான் எனது குழந்தைப்பருவம் முழுவதையும் இந்த வீட்டில்தான் கழித்தேன் (இப்போது அவர்கள் வசிக்கும் வீடு). நான் முழுநேரமாக பழைய செய்தித்தாள்கள் விற்பனை செய்யும் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் 10ம் வகுப்பு வரை படித்தேன்“ என்று சவான் கூறுகிறார். புதிதாக வந்த பழைய செய்தித்தாள்களை கட்டிக்கொண்டே நம்மிடம் அவர் பேசுகிறார்.

சில ஆண்டுகளுக்கு பின்னர், பதின் பருவத்தின் இறுதிக்காலங்களில், சவான் தனது இரண்டாவது வேலையை செய்யத் துவங்குகிறார். புனே மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனம் இயக்குபவராக உள்ளார். புனேவின் சிவாஜி நகரின் மாடல் காலனியை சுற்றிய பகுதிகள் அவர் குப்பை சேகரிக்கும் பகுதிகளாக உள்ளது.

சவான், தனது இரண்டாவது வேலையான குப்பை சேகரிக்கும் டிரக் இயக்கும் வேலையை செய்யும்போது, அவரது தம்பி கடையை பார்த்துக்கொள்வதில் உதவியாக இருப்பார். “நான் காலை வேளைகளில் குப்பை சேகரிக்கும் பணியை செய்வேன். பின்னர் மதியம் 2 மணி முதல் இரவு வரை கடையில் வேலை செய்வேன்.  சில நேரங்களில் இரவு 10 மணி வரை வேலை நீடிக்கும்“ என்று அவர் கூறுகிறார். 

குப்பை சேகரிக்கும் வேலையின்போதுதான் தனக்கு இருமுறையும் வைரஸ் தொற்று ஏற்பட்டதாக சவான் நம்புகிறார். “குப்பை சேகரிக்கும் பணி சில நேரங்களில் அபாயகரமான பொருட்களை கையாள வைத்துவிடும்“ என்று அவர் கூறுகிறார். புனே மாநகராட்சி, ரப்பர் கையுறைகள் மற்றும் சானிடைசர் போன்ற சில பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் என்ற கூடுதல் தகவல்களையும் கூறுகிறார். “ஆனால், அவை தரமானதாகவும், போதிய அளவிலும் இருக்காது“  என்று அவர் மேலும் தெரிவித்தார். 

சவான் குணமடைந்தபோதும், மக்கள் அவரிடம் எச்சரிக்கையுடனே பழகுவார்கள். “அவர்கள் என் அருகில் வருவதற்கு இன்னும் அச்சப்படுவார்கள். நான் அவர்களுக்கு வைரசை பரப்பிவிடுவேன் என்று எண்ணுவார்கள். நான் பழைய நிலை மீண்டும் வரவேண்டும் என்று விரும்புகிறேன்“ என்று அவர் கூறுகிறார். அவரது கடைக்கு மற்றொரு வாடிக்கையாளர் சிறிதளவு பழைய செய்தித்தாள்களை எடுத்துவருகிறார்.

Editor's note

சன்விதி ஐயர், புனேவின் FLAME பல்கலைக்கழகத்தின் இதழியல் மூன்றாமாண்டு மாணவி. பாரி கல்வியுடனான அவரது பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த செய்தியை எழுதியுள்ளார். ‘செய்தி அறைகளைக் கடந்து செய்தியுடன் தொடர்புடையவர்கள் பட்ட துயரங்களை சுட்டிக்காட்ட விரும்பினேன்‘ என்று அவர் கூறுகிறார். “பாரியுடன் நான் பணிபுரிந்தபோது அடுத்தவர்களின் நிலையில் நம்மை பொருத்தி அவர்களின் பிரச்சனைகளை அணுகவேண்டும் எனக் கற்றுக் கொண்டேன். பல்வேறு தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் குறித்து நாம் ஆவணப்படுத்துவதன் அவசியம் குறித்தும் புரிந்து கொண்டேன். மேலும், நல்ல புகைப்படங்கள் ஒரு கதையை விளக்குவதற்கு எவ்வாறு உதவுகிறது என்று தெரிந்துகொண்டேன்“ என்று அவர் தெரிவித்தார். 

தமிழில்: பிரியதர்சினி. R. 

பிரியதர்சினி. R. , மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.