
உத்தர பிரதேசத்தின் மோகன்லால்கஞ் தாலுகாவில் உள்ள கமல் பூர் பிச்சிலிகாவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அதாவது இரண்டு பைகா நிலத்தில் ராம் பகதூர் அவர்கள் அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை விளைவித்து வருகிறார். ஒரு நல்ல விளைச்சல் இருக்கும் ஆண்டில் அவரது நிலத்தில் 20 குவிண்டால் அரிசியும் 14 குவிண்டால் கோதுமையும் விளையும் அதில் பாதியை 50 வயதாகும் இந்த விவசாயி தனது 5 பேர் கொண்ட குடும்பத்தினரின் ஜீவிதத்திற்கு வைத்துக் கொள்கிறார்; மீதமுள்ளவற்றை அவர் விற்றாக வேண்டும். “விவசாயத்தில் இருந்து நாங்கள் சம்பாதிப்பது எங்களது குழந்தைகளின் கல்விக்கும், மருத்துவ செலவு போன்ற பொறுப்புகளுக்கு போதுமானதாக இல்லை” என்று அவர் கூறுகிறார்.
கமல் பூர் பிச்சிலிகா உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, இம்மாநிலத்தில் உள்ள 92 சதவீத விவசாயிகள் ராம் பகதுரைப் போன்றவர்களே – சிறு மற்றும் குறு விவசாயிகள் அரை ஏக்கர் முதல் சில ஏக்கர்கள் வரை உள்ள நிலத்தை வைத்து வாழ்க்கையை சமாளிக்க முற்படுகின்றனர்.



கமல் பூர் பிச்சிலிகாவை சேர்ந்த எந்த விவசாயியும் அங்கிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாய போராட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லை, ஆனால் அவர்கள் அனைவரும் தில்லியில் நடக்கும் விவசாய போராட்டத்தின் காரணங்களை ஏற்கின்றனர். “எங்களைப் போன்ற சிறு விவசாயிகள் தனியார் நிறுவனத்திடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ ஒரு நல்ல விகிதத்தை பெற முடியாது, உணவை உற்பத்தி செய்வது நாங்களாக இருந்தாலும் அதை நாங்கள் கடைசியாகத் தான் சாப்பிட முடியும்”, என்று அவர் கூறுகிறார்.
லக்னோ மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் 427 வீடுகள் உள்ளன அவற்றில் பெரும்பாலானவை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றன. பெரும்பாலான வீடுகளில் வெளியில் சிமெண்ட் போட்டு கூரைவேய்ந்த மாட்டுக் கொட்டகைகள் இருக்கின்றன. குறுகிய மண் சாலையில் ஆங்காங்கே குளிர் கால வெயிலில் சாணங்கள் உலர்த்தப்பட்டு கிடைக்கின்றன.
ஒரு சிறு ஓடை கிராமத்தின் வழியாக ஓடுகிறது ஆனால் அது பாசனத்திற்கு போதுமானதாக இல்லை. பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு தேவையான நீர் பாய்ச்சுவதற்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து இருக்கின்றனர். ஒரு பைகா நிலத்திலுள்ள நெற்பயிர் பாசனத்திற்கு கிணற்றுப் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கு மூவாயிரம் ரூபாய் டீசலுக்கு மட்டும் செலவாகிறது என்று இரண்டு கிணறுகள் வைத்து இரண்டு பைகா நிலத்தில் பாசனம் செய்து வரும் ராம் பகதூர் கூறுகிறார்.
‘விவசாயம் மட்டுமே போதுமானதாக இல்லை’
33 வயதாகும் சரிதா பால் ஒரு விவசாயி அவர் சொந்தமாக ஒரு பைகா நிலத்தை வைத்திருக்கிறார், ஒரு மாடும், ஒரு எருமையும் வைத்திருக்கிறார். அவர் மூன்று கிணறுகளை மூடிவிட்டு அரிசியும், கோதுமையும் விளைவித்து வருகிறார். மோட்டார் மெதுவாக இயங்க ஆரம்பித்து விட்டது எனது அரை ஏக்கர் நிலத்தை பாசனம் செய்வதற்கு 5 மணிநேரம் ஆனது அது டீசல் செலவை மேலும் அதிகரித்தது என்று அவர் கூறுகிறார்.
“நான் எங்களது கிராமத்திற்கு வரும் இடைத்தரகரிடம் விற்று விடுகிறேன். டீசல், உரம், பூச்சிக்கொல்லி, ஆகியவற்றிற்கு நான் செலவு செய்தது போக பருவம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் என் கையில் மிஞ்சும்”, என்று அவர் கூறுகிறார். விவசாயம் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. எனது கணவரின் வருமானத்தின் மூலமும் தான் நாங்கள் உயிர் வாழ்ந்து வருகிறோம் என்று லக்னோ நகரில் காவலாளியாக பணிபுரிந்து வரும் அவரது கணவர் ஆவாத் பால் யாதவின் பணியினை குறிப்பிட்டுக் கூறுகிறார்.
இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் அனைவருமே அறுவடை நேரத்தில் வயலுக்கு வந்து நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளும் இடைத்தரகர்களிடம் தங்களது விளைச்சலை விற்று விடுகின்றனர். கொள்முதல் செய்பவர்களே கடன் கொடுப்பவர்களாகவும் இருப்பதால் அவர்கள் மாதம் ஒன்றுக்கு 2 முதல் 5 சதவீதம் வரை வசூலிக்கின்றனர் அது வருடமொன்றுக்கு 24 முதல் 60% வரை பணத்திற்கு சமமாகும்.



ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கவோ, டீசலுக்கு பணம் தேவைப்பட்டாலோ நான் உள்ளூரில் இருக்கும் இடைத்தரகரிடமிருந்து கடன் வாங்குகிறேன். எனது அறுவடை தயாராக இருக்கும்போது அவர் என்ன விலைக்கு கேட்கிறாரோ அந்த விலைக்கு விற்க வேண்டும்”, என்று அவரைப் போன்ற சிறு விவசாயிகள் வழக்கமாக எதிர்கொள்ளும் அறுவடை நேர சிக்கலான கடன்காரர்களே கொள்முதல் செய்பவர்களாகவும் இருக்கும் மன்னிக்க முடியாத ஒப்பந்த முறைகளை விளக்குகிறார் ஆவாத் பால். அந்த விகிதம் ஆவாத் பால் மண்டியில் விற்றால் கிடைக்கும் விலையுடன் ஒப்பிட்டால் மிகவும் குறைவு.
“நான் வழக்கமாக மாண்டிக்குச் சென்று 20 குவிண்டால் நெல்லை விற்றால் 36 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் (ஒரு குவிண்டால் அரிசிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 1835 ரூபாய்). அதே நேரத்தில் அதை நான் இங்கு கிராமத்திலேயே விற்கும் போது எனக்கு சுமார் 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும் அதே அளவு நெல்லுக்கு”, இது புறக்கணிக்கக் கடினமாக இருக்கும் ஒரு வித்தியாசம் என்று அவர் கூறுகிறார்.
ஆவாத் பால் தனது அறுவடையை மண்டியில் சிலமுறை விற்றுள்ளார். அவர் அவரது சகோதரர் மற்றும் இன்னும் சிலரும் சேர்ந்து ஒரு டிராக்டரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கிசான் சதன் சர்காரி சமாதிக்கு சென்று அவர்களின் அறுவடையை விற்று வருகின்றனர். டிராக்டரின் முழு கொள்ளளவான 25 குவிண்டால் எடுத்துச் சென்றால் ஒரு குவிண்டாலுக்கு ஆகும் போக்குவரத்து செலவு 40 ரூபாய் மொத்தம் உள்ள சுமார் 1000 ரூபாய் செலவினை விகிதாச்சார முறையில் பிரித்துக் கொள்கின்றனர்.
“நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்கும் பட்சத்தில் ஊழல் செய்யாத அரசு அதிகாரியாக கிடைக்கப்பெற்றால் காசோலையை அவர் நேரடியாகவே உங்களுக்கு வழங்குவார். அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் அவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்; அப்படி எனக்கு இதுவரை நடந்ததில்லை”, என்று அவர் கூறுகிறார்.
இவர்களது மகள் பிராச்சிக்கு பதிமூன்று வயது கிராம இளையோர் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். “வளர்ந்தபிறகு பிராச்சி ஆசிரியையாக விரும்புகிறார். அவருக்கு இந்தியில் நல்ல ஆர்வம் உள்ளது. எனது மகன் சௌரவ் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்”, என்று தனது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளைப் பற்றி பேசும்பொழுது சரிதாவின் முகம் பெருமிதத்தில் மிளிர்கிறது. நாங்கள் சம்பாதிக்கும் பணம் பிழைப்புக்கே போதுமானதாக இல்லை. உயர் கல்வி கட்டணத்தை நாங்கள் எப்படி செலுத்த முடியும்?” என்று அவர்களது எதிர்காலத்தைப் பற்றி கவலையுடன் கூறுகிறார்.
வயலிலேயே விற்பனை
தங்களது இருபதுகளின் பிற்பகுதியில் இருக்கும் ராணி (அவர் இந்த பெயரை பயன்படுத்த விரும்புகிறார்) மற்றும் அவரது மைத்துனி மஞ்சு (அவர் இப்பெயரை பயன்படுத்த விரும்புகிறார்) அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து ஒரு பைகா (0.4 ஏக்கர்) நிலத்தில் அரிசி மற்றும் கோதுமையை விளைவித்து வருகின்றனர். அவர்கள் உருளைக்கிழங்கு போன்ற பயிர்களையும் விளைவித்திருக்கின்றனர் ஆனால் குரங்குகள் மற்றும் மான்கள் அப்பயிரை நாசம் செய்வதால் இப்போது பயிரிடுவதில்லை என்கின்றனர்.
கமல் பூர் பிச்சிலிகாவில் உள்ள இந்த நிலம் சகோதரர்களான அவர்களது கணவன்மார்களுக்கு சொந்தமானது. ராணியின் கணவர் இருவரில் மூத்தவர் – சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார், ஆனாலும் குடும்பம் ஒன்றாகத்தான் இருந்தது. எங்களுடன் பேசுவதற்காக வயல் வேலையை விட்டுவிட்டு வந்தபோது ராணி அதிகம் பேசுவதை மஞ்சு அனுமதித்தார்.




“ஊரடங்கு காலத்தில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்தது ஆனால் எங்கள் விளைச்சளுக்கான விலை மட்டும் குறைந்தது”, என்று கூறுகிறார் ராணி. இந்த இரண்டு பெண்களும் தங்கள் வயலுக்கே வந்து கொள்முதல் செய்யும் இடைத்தரகர்களிடம் அவர்கள் கேட்கும் விலைக்கே தங்களது விளைச்சலை விற்றுவிடுகின்றனர். பெருஞ்சந்தைகளில் அதிக விலைக்கு தங்களது விளைச்சலை விற்பதற்காக அவர்களால் தங்களது குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச்செல்ல முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்.
ராணியின் மகன் ரதேஷ் நான்காம் வகுப்பிலும், மஞ்சுவின் மகன்களான பிரங்கூர் மற்றும் ஹிமான்சூ முறையே 5 மற்றும் 6 ஆம் வகுப்பில் பயின்று வருகின்றனர். “எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைகள் விவசாயிகளாவதை விரும்பமாட்டார்கள். நாங்கள் எங்களது குழந்தைகள் படித்து வெளியூரில் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களது வேலை அவர்களை வளர்த்து படிக்க வைப்பது, ஆனால் அவர்கள் தலையில் குச்சியை வைத்து மிரட்டி அவர்களைப் படிக்க வைக்க முடியாது”, என்று சொல்லி சிரிக்கிறார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களின் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை. சட்டங்கள் என்னாவாயிருந்தாலும் எங்களது யதார்த்தம் மாறப்போவதில்லை – உள்ளீட்டு விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் எங்கள் வருமானம் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு விவசாயி உயிர்வாழ்வது எப்படி?”, என்று ராணி கேட்கிறார்.

‘போராட்டம் மட்டுமே ஒரே வழி’
40 வயதாகும் சுரேஷ் குமார், நான்கு பைகா நிலத்தை வைத்து நெல், கோதுமை, பட்டானி, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் கடுகு ஆகியவற்றை விளைவித்து வருகிறார். அவர்களது ஊருக்கு வந்து கொள்முதல் செய்யும் வியாபரிகளிடமே அவர் விற்பனை செய்கிறார். இவரது நான்கு குழந்தைகளும் கிராமத்தில் இருக்கும் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அவர்கள் படிப்பை முடித்ததும் அவர்களது படிப்பை நிறுத்திவிடுவேன் என்கிறார். “விலைவாசி உயர்ந்துகொண்டே வருவதால் ஒன்று விவசாயத்தில் முதலீடு செய்ய முடியும் அல்லது அவர்களது படிப்பிற்கு செய்ய முடியும்”, என்று கூறுகிறார். இவரது அடுத்த பயிர் உருளைக்கிழங்கு மற்றும் கடுகு அதற்காக ஏற்கனவே அவர் 2000 – 3000 ரூபாய் பூச்சிக்கொல்லி மற்றும் உரத்திற்கு செலவு செய்துள்ளார்.
சுரேஷ் 80 – 100 அடி ஆழமுள்ள 4 கிணற்று பாசனத்திலும் முதலீடு செய்துள்ளார், ஒவ்வொன்றுக்கும் 80,000 ரூபாய் செலவு செய்துள்ளார். கிணற்று பாசனத்தை இயக்குவதற்கான டீசல் லிட்டருக்கு 80-85 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு பைகா நிலத்தில் பாசனம் செய்வதற்கு டீசலுக்கு மட்டும் 8000 ரூபாய் செலவாகிறது. “பூச்சிக்கொல்லி மற்றும் உரத்திற்கு செய்த செலவையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் 6 மாதத்தின் இறுதியில் அறுவடைக்கு பின்னர் என் கையில் 2000 – 4000 ரூபாய் தான் மிஞ்சும்”, என்று கூறுகிறார்.
தில்லியின் எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை பற்றி கேட்ட போது, “இத்தகைய பிரச்சனைகளை ஒரு மனிதன் சந்திக்க நேர்ந்தால் போராட்டம் ஒன்று தான் வழி. எங்களது வாழ்க்கையும் வாழ்வாதாரமும் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது ஆனால் மற்ற எல்லாவற்றின் விலையும் உயர்ந்து வருகிறது. விவசாயி எதை சாப்பிடுவது? எதை சேமிப்பது?” என்று சுரேஷ் கேட்கிறார்.
Editor's note
கரிமா சத்வானி சென்னையிலுள்ள இதழியலுக்கான ஏசியன் கல்லூரியில் பயின்று வருகிறார். இது பாரிக்கு அவர் எழுதும் இரண்டாவது கட்டுரை. அவரது முதலாவது கட்டுரையான 'A fragile future for chinhat pottery' டிசம்பர் 1 2020 ல் அன்று பாரி கல்வி வலைதளத்தில் பதிப்பிக்கபட்டது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தை களத்தில் இருந்தே எழுத முடிவது எனது பாக்கியம் என்று கூறுகிறார். நான் பேசிய விவசாயிகளிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த விஷ்யத்தைப்பற்றி அவர்கள் நன்கறந்தவர்களாகவும், விழிப்புணர்வுடனும் இருக்கின்றனர் என்று கூறினார்.
தமிழில்: சோனியா போஸ்
சமூகவியல் முதுநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.