“பெரும்பாலான மீன்பிடி போய்விட்டது. எஞ்சியுள்ள அறுவடைகாலத்தில் பெற்றுவிட நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம்” என்று கந்தன் கடவைச் சேர்ந்த 52 வயதான லைஜீ செபாஸ்டின், தனது வீட்டைச்சுற்றியுள்ள பாதஷேகரம் எனப்படும் பெரிய அளவிலான மீன்பிடித்தளத்தை பாரத்துக்கொண்டே கூறுகிறார். பாதஷேகரத்தின் சொந்தக்காரருடன் லைஜீ ஒப்பந்தம் செய்துள்ளார். அவரின் ஆண்டு பங்கை பெற்றுக்கொண்டால் மட்டுமே, லைஜீ இப்பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவார். “அவர்கள் 100 கிலோக்களுக்கும் மேல் எடுத்துக்கொள்வார்கள். இந்த கொரோனா வைரசும் அவர்களின் வழக்கமான பங்கை நிறுத்தவில்லை” என்று கவலையுடன் லைஜீ கூறுகிறார்.

வழக்கமாக லைஜீ, அருகில் உள்ள ஏரிகள் மற்றும் லட்சத்தீவு கடலின் தண்ணீர் தடங்களில் கூடுதலாக மீன்பிடிப்பார். எனினும், கேரளா அரசின் ஊரடங்கு, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி துவங்கியது அவரது திட்டத்தை சரித்துவிட்டது. “நான் எனது படகை எடுக்க முடியும். ஆனால் என்ன பயன்“ என்று மே 1ம் தேதி முதல் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கலாம் என்ற அரசின் முடிவை சுட்டிக்காட்டி அவர் கேட்கிறார். அவருக்கு முன்னால் உள்ள பெரிய நீர்ப்பரப்பை குறித்துக்காட்டி, “எந்த மீனும் எஞ்சவில்லை, அதனால், எனக்கு எதுவும் கிடைக்கவில்லை“ என்று அவர் கூறுகிறார்.

லைஜீ தனது வீட்டிற்கு எதிரில் உள்ள சிறிய கால்வாயில் இருந்து அவரது படகை எடுத்து, லட்சத்தீவின் பெரிய நீர்ப்பரப்பில் ஓட்டிச்செல்கிறார்

2010ம் ஆண்டு கேரளாவின் கடல் மீன்பிடித்தொழிலாளர்கள் கணக்கெடுப்பின்படி, 1,18,937 மீனவக்குடும்பங்கள் இருந்தன. அதில் 55 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் அவர்களை வறுத்துவதாக உள்ளது. மாநில அரசு ஒரே ஒருமுறை மட்டும் ரூ.2 ஆயிரத்தை நிதி உதவியாக வழங்கியது. அவரது கிராமத்தில் இந்நிதி உதவியை பெற்ற பல பேரில் லைஜீவும் ஒருவராவார். அவரது குடும்பத்திற்கு பொதுவினியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ரேஷன் உதவிகளும் கிடைக்கிறது.

லைஜீ அவரது குடும்பத்தின் நான்காவது தலைமுறை மீனவர் மற்றும் கந்தக்கடவில் நான்கு பேர் கொண்ட தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கந்தக்கடவு ஒரு சிறிய கிராமம். அங்கு 1,444 பேர் வசிக்கிறார்கள். லைஜீவின் மனைவி ஜீனா, கொச்சியில் வீட்டு வேலை உதவியாளராக உள்ளார். அவர் பணிக்காக வீட்டில் இருந்து சென்று வருவார். தற்போது ஊரடங்கால் வேலையில்லாமல் இந்த குடும்பம் அன்றாட தேவைகளுக்காக அல்லல்பட்டு வருகிறது.

எர்ணாகுளத்தில் இருந்து குறைந்தபட்சம் 35 கிலோ மீட்டர் தொலைவில், இந்தியப்பெருங்கடலின் கழிமுகத்தில் உள்ள கந்தக்கடவில் மீனவக் குடும்பங்கள் வசிக்கின்றன. பாதஷேகரத்தின் உப்பு நீரை சார்ந்து இறால், நண்டு மற்றும் பெரிய கடல் மீன்களான கொடுவா மற்றும் கரிமீன் ஆகியவற்றை பிடித்து பிழைத்து வருகின்றனர். “இந்த 600 ஏக்கர் நிலம் ஒரு தனிநபருக்கு சொந்தமானது மற்றும் மற்றவர்களுக்கு சொந்தமான நிலங்களும் உள்ளன. அவற்றை பாதுகாவலர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்” என்று லைஜீ கூறுகிறார்.

லைஜீ, முதலாளிகளுக்காக வேலை செய்யமாட்டார். ஏனெனில், அது மீன்பிடி அளவை வலியுறுத்தும், மீன் அடிப்படையிலான வியாபார ஒப்பந்தத்தி கீழ் பணிசெய்ய நிர்பந்திக்கும். “வியாபாரத் தேவைகளுக்காக ஒருவர் மீன்பிடிக்க முடியாது. பருவமழை, காற்று மற்றும் சரியான அளவிலான படகு ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.” அடிக்கடி ஒப்பந்தம் முடியும் தருவாயில், சம்பாதிப்பதை அதிகரிக்கவும், அதிகமாக மீன்பிடிப்பது பொதுவாக நடக்கும். அந்த சுமை, முதலாளிகளுக்காக, அதுபோன்ற ஒப்பந்தங்களில் பணிபுரியும் மீனவர்களின் மேல் விழும்.

கந்தக்கடவைச் சேர்ந்த மற்றொரு மீனவர் மிகக்குறைவான மீன்களை பிடித்து கரை திரும்புகிறார்

சுழற்சி வேளாண்மை : ஒருமுறை விவசாயம், ஒருமுறை மீன்பிடி

பாதஷேகரத்தில் பாரம்பரியமாக நெல் பயிரிடுவதும், மீன்வளர்ப்பும் சுழற்சி முறையில் நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் 4 முதல் 8 மாதங்கள் இருக்கும். மீன்வளர்ப்பு குட்டைகள் அமைக்க தண்ணீர் வெளிக்கொணரப்பட்டு, ஆண்டுதோறும், ஜீன் முதல் நவம்பர் மாதம் வரை மீன் வளர்க்கப்பயன்படுத்தப்படும். ஆண்டின் மற்ற மாதங்களில் நெல் பயிரிடுவதற்கு விடப்படும். பூக்காலி என்ற வகை நெல் விதைக்கப்பட்டு, அறுவடை முடிந்தபின் அதன் வைக்கோல் மீன் உணவாகப்பயன்படுத்தப்படும். சிறிய மீன்கள் மற்றும் மீன் கழிவுகள் உரமாக்கப்பட்டு, அவை பயிருக்கான உரமாகப்பயன்படுத்தப்படும்.

சிறிய அளவைவிட, நெல்லுடனான சுழற்சி வேளாண்மை செய்யும் பழக்கம் நிறுத்தப்பட்டுவிட்டது. மாறாக ஆண்டு முழுவதும், மீன் அல்லது இறால் வியாபாரமாக அது மாறிவிட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் கீழ் இயங்கும் எர்ணாகுளத்தில் உள்ள கிரிஷி விக்யான் கேந்திரா மையம், ஒருங்கிணைந்த நெல் மற்றும் இறால், மீன் வளர்ப்புக்கு, ஹெக்டேருக்கு ரூ.1.3 லட்சம் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது. இது நெல் மட்டுமே வளர்ப்பதைவிட லாபகரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மாநில அரசு மானியங்களும், விதைக்கான விலை மற்றும் பாதஷேகரத்தில் பயன்படுத்தும் மீன்பிடி கருவிகளும் வழங்குகிறது. மீன் வளர்ப்பவர்களுக்கு, மீன் வளர்ப்பதற்கு பயன்படுத்தும் விதையில், 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஊரடங்கு மற்றும் மீன்பிடி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் முன்னர், லைஜீ அவரது வருமானத்தை பெருக்கிக்கொள்வதற்காக, பெரிய கப்பல்களில் இந்தியப்பெருங்கடல் பகுதியில் சென்று பெரிய மீன்கள் மற்றும் அதிக எடையில் மீன்கள் பிடித்து வந்தார். அதுவும் நிலைத்திருக்கவில்லை. ஏனெனில், அவருடன் வரும் தமிழக மீனவர்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடனே சொந்த ஊர் திரும்பிவிட்டனர். “மீன்பிடிக்கச்செல்வதற்கு கப்பல் தயாராக உள்ளது. மீன்பிடிக்கச்செல்லும் முன்னர் தமிழகத்தில் உள்ள எங்கள் மீனவர்களை வரவழைக்க வேண்டும்“ என்று அவர் கூறுகிறார்.

தேவையான அளவு மீன்களை கண்டுபிடிப்பது பிரச்னையின் ஒரு பகுதிதான். அதை பாதுகாத்து வைப்பது மற்றும் வெளியூர்களுக்கு எடுத்துச்செல்வதில்தான் சவால்கள் அதிகமுள்ளது. தேவையும் அதிகரிக்கவில்லை. ஐநாவின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாட்டின் அறிக்கைப்படி, இந்திய இறால்களில் ஏற்றுமதி சீனாவிற்கு 10 முதல் 15 சதவீதம் வரை குறைந்துவிட்டது. தேசிய மீன்வள வளர்ச்சி ஆணைய வலைதளத்தில், ஆண்டுக்கு ரூ.45,106.89 கோடி மதிப்பிலான மீன் மற்றும் மீன் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அது வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 20 சதவீதமும், மொத்த ஏற்றுமதியில் 10 சதவீதமும் பங்கு வகிக்கிறது.

“நாங்கள் கடலில் பிடிக்கும் மீன்கள் அனைத்தும் உயர்தரமானவை, விலையுயர்ந்தவை இது வெளிமாநிலங்களுக்கும், சீனா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு பிடிக்கப்படும் இறால், சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது நங்கூரம் போடப்பட்ட கப்பல்கள் மட்டுமே துறைமுகத்தில் எஞ்சியுள்ளன.” என்று லைஜீ கூறுகிறார்.

பிடித்த மீன் மற்றும் இறால்களை விற்பதற்கு தனியாக சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இடைத்தரகர்(அவர்கள் மீனை அவ்வப்போது பதப்படுத்துவர்) மூலம் விற்கப்படும் பழைய விற்பனை முறை தற்போது சாத்தியமில்லை. ஏனெனில், மீன்வளத்துறையால் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. “கொரோனா வைரஸ் பிரச்னைக்கு முன்னர், நான் பிடித்த மீன் மற்றும் இறால் போன்றவற்றை எளிதாக சந்தைக்கு எடுத்துக்கொண்டு செல்வேன். அங்கு அதை நியாயமான விலைகொடுத்து வாங்கும் இடைத்தரகர் (agent) தயாராக இருப்பார். நியாயமான விலை கிடைக்காது என்று நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவர் எங்களுக்கு கடனும் கொடுப்பார்.” என்று லைஜீ கூறுகிறார்.

மீன்வளம் மற்றும் கடல் உணவுப்பொருட்களின் வழங்கல் சங்கிலி மிகச் சிக்கலான ஒன்றுதான். குறிப்பாக உள்ளூரில் அது மிகக்கடினம்தான். ஊரடங்கும் ஒவ்வொரு நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிடிக்கப்பட்ட அனைத்தும், தரையிரங்கும் மையத்தில் ஏலம் விடப்பட்டும். அவற்றை மற்ற இடங்களுக்கு எடுத்துச்செல்லும் போக்குவரத்துக்கான பொறுப்பு வாங்குவோரைச் சேர்ந்தது.

“சேமிப்பு கிடங்கு வசதிகள் குறைவு என்பது நிலையான பிரச்னை. மீன்பிடித்துவிட்டு மீனவர்கள் தரையிறங்கும் தளத்தில் போதிய சேமிப்பு கிடங்கு வசதிகள் இல்லை.” என்று மத்திய மீன்வள தொழில்நுட்பத்துறை மைய முதன்மை விஞ்ஞானி டாக்டர். நிகிதா கோபால் கூறுகிறார்.

கோவிட் – 19ஆல் ஏற்பட்ட அச்சம் காரணமாக ஏலம் விடுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு மீனுக்கு ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயிக்கலாம். இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில், குறிப்பிட்ட விலை நிர்ணயிப்பது, ஊரடங்குக்கு முன்னரே அவர்களுக்கு உறுதியளிக்கும். ஆனால் இப்போது, போதியளவு மீன்பிடித்து, அதை நகரில் உள்ள சந்தைக்கு கொண்டுசெல்லும், போக்குவரத்து வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே லாபகரமாக உள்ளது.

47 வயதான ஜெஸ்ஸி.கே மற்றும் அவரது மனைவி 44 வயதான ஷிபு, இருவருக்கும், கொச்சியின் மத்தியில் உள்ள காதவந்த்ரா மீன் சந்தையில் கடை உள்ளது. அங்கு அவர்கள் ஜெஸ்ஸி பிடித்துவரும் மீன்களை விற்பனை செய்வார்கள். இந்த சந்தையில் மூன்று முதல் நான்கு, மற்ற மீன் விற்பவர்கள் உள்ளனர். அவர்களுடன் மற்ற இறைச்சி விற்பவர்களும், காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள் விற்பவர்களும் உள்ளனர். காலை 7 முதல் 11 மணி வரை மட்டுமே மீன் சந்தையை திறக்க அரசு விதிகள் அனுமதிக்கிறது. ஏப்ரல் 3ம் தேதி கோழிக்கோடு மத்திய மீன் சந்தையை பரிசோதனை முறையாக திறந்து பார்த்து, அங்கு அதிக கூட்டம் குவிந்ததால், இந்த நேரக்கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு கூட்டம் குவிவது சந்தைகளை முழுமையாக அடைப்பதற்கு, அதிகாரிகளை நிர்பந்திக்கிறது.

“பல வாரங்களாக மீன் விற்பனை செய்ய முடியாததால், நாங்கள் நிறைய பணத்தை இழந்துவிட்டோம். மீன்களை பாதுகாத்து வைப்பதற்கு, பெரிய உறைவிப்பான் கருவிகள் எங்களிடம் இல்லை. அதனால், எங்களால் விற்கமுடியாமல் நஷ்மடைந்தோம்” என்று ஜெஸ்ஸி கூறுகிறார். இறுதியாக அவருக்கு விற்பதற்கு அனுமதி கிடைத்தது. அவருக்கு 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்தைக்கு, மீனை கொண்டு செல்வதற்கும் காவல்துறையிடம் இருந்தும் அனுமதி பெறவேண்டியிருந்தது. அவர்களின் மகன் ஆட்டோ ஓட்டுனர் என்பதால், அவர்களுக்கு மீனை, சந்தைக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக இருந்தது.

மீன்பிடி அளவு குறைந்திருப்பதால், விலை அனைத்தும் இரட்டிப்பாகியிருக்கிறது. இந்த விலையேற்றத்தை, ஜெஸ்ஸி மற்றும் ஷிபு போன்ற வியாபாரிகள், அவர்களிடம் மீன் வாங்குபவர்கள் மீது திணிக்க வேண்டியிருக்கிறது. “எல்லோரும் அதிக விலைகொடுத்து வாங்கமாட்டார்கள்” என்று ஷிபு கூறினார். அவர், மிதமான எண்ணிக்கையில் பிடித்த மீன்களை, சந்தை மூடப்படும் மதிய வேளையில் யாராவது வாங்குவார்களா? என்று கையிருப்பை விற்கவேண்டிய நிலையில் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே நம்மிடம் பேசினார். “இந்த ஊரடங்கு எங்களை மிகவும் வறுத்துகிறது. எனினும் ஒவ்வொரு நாளையும் மூழ்கிவிடமாட்டோம் என்ற நம்பிக்கையில் கடத்திக்கொண்டிருக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

‘ஒவ்வொரு வேளை உணவுடனும் நாங்கள் மீனை உண்ணுகிறோம்’

ஷிபுவைப்போன்ற பெண் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். கேரளாவின் 2010ம் ஆண்டு கடல்சார் கணக்கெடுப்பின்படி, தோலுரித்தல் வேலையில் 96 சதவீத பெண்களும், பதப்படுத்தும் பணிகளில் 84 சதவீதமும், சந்தையிடுதலில் 79 சதவீத பெண்களும் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீன்பிடி தொழில் தடைபட்டுள்ளதால், ஷிபுவைப்போன்ற மீனவப்பெண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் மீன்கள் மூலம் பரவும் என்ற போலிச்செய்திகள் தங்கள் துயரங்களை எவ்வாறு அதிகரித்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். “நாங்கள் மூன்று வேளையும் உணவுடன் மீனை சாப்பிடுகிறோம். எங்களில் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், இது சீனாவில் கடல் உணவு சந்தையில் இருந்துதான் பரவியது, அதனால், இங்குள்ள சந்தையில் இருந்தும் இது பரவக்கூடும் என்று மக்கள் கூறுகிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.

இந்த ச்சாலா மீன்கள், மீனவர்களின் சிறு படகுகளில் இருந்து பிடிக்கப்பட்டவை, இதற்கு முன் இந்த விலை விற்றதில்லை. சிறு படகுகள் மட்டுமே தற்போது மீன்பிடிக்கப் பயன்படுத்த முடியும். சிறு படகில் நிறைய மீன்கள் பிடிக்க முடியாது. ஆனால், புதியதாக இருக்கும்

காண்க வீடியோ: ‘நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காக நாங்களும் சம்பாதிக்க வேண்டும்

மத்திய மீன்வளத்தொழிநுட்ப மையத்தைச் சேர்ந்த டாக்டர். கோபால் கூறுகையில், “பருவமழை மீன்பிடி தடைக்காலம் ஜீன் 9ம் தேதி துவங்கியவுடன் நிலை மேலும் மோசமடையும். அடுத்த 52 நாட்களுக்கு அதுவே தொடரும். அதிகளவிலான மீன் மற்றும் கடல்சார் உணவுகள் அனைத்தும் பெரியளவிலாக மீன்பிடி தொழில் நடைபெறும் துறை முகங்களான விப்பின், கொச்சி கோட்டை மற்றும் முனாம்பம் ஆகியவற்றில் இருந்துதான் வரும் ஆனால், அவற்றில் பெரும்பாலானவை தற்போது மூடிக்கிக்கின்றன.” இவ்வாறு அவர் கூறினார்.

லைஜீவிற்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகனுக்கு மட்டும்தான் மீன்பிடித்தொழிலில் ஆர்வம் உள்ளது. ஆனால், அவரும் விரைவில் அவரது மூத்த சகோதரரைத் தொடர்ந்து தீயணைப்பு வீரராக பயிற்சி பெறுவார். இரண்டாவது மகன் கொச்சியில் ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறார்.

“எங்கள் வாழ்க்கை எங்கள் கிராமத்திலேயேதான் உள்ளது. இந்த வாழ்க்கைதான் எனக்கு தெரிந்த வாழ்க்கை” என்று லைஜீ கூறுகிறார். “வெள்ளம் வந்தாலும், எங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் இந்த கொரோனாவுடன் வாழப்பழகுதல் என்பதுதான் எங்களுக்கு பரிட்சயம் இல்லாத ஒன்று. உங்களுக்கு தெரியுமா மலையாளிகள் மீன் இல்லாமல் எதுவும் செய்யமாட்டார்கள். எனவே எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது” என்று அவர் கூறினார்.

தமிழில்: பிரியதர்சினி R.

பிரியதர்சினி R. மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.

Editor's note

வேதிகா பிள்ளை, தனது இளநிலை சமூகவியல் படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட லேடி சிரீராம் கல்லூரியில் படிக்கிறார். அவருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இனவியல் படத்தயாரிப்பு தொழிநுட்பங்கள் பாடத்திற்காக, அவர் மீனவ சமுதாய மக்கள் குறித்து படம் எடுத்துள்ளார். அதுவே பாரி கல்வியின் இந்த செய்திக்கு வழிவகுத்தது என்று வேதிகா கூறுகிறார். மீனவ சமுதாயம், இயக்கம் மற்றும் மூலதன இடப்பெயர்வு, கொள்கை மாற்றம் மற்றும் சமூக விதிகள் போன்றவற்றால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பெரிய சமூக கட்டுமானத்தில் அவர்கள் மூழ்கியுள்ளதை இது காட்டுகிறது. இந்த செய்தியை பாரிக்காக செய்தபோது, அது எனது சமூகவியல் கற்பனைகளை இன்னும் ஆழமாக்கியுள்ளது. நமது அன்றாட வாழ்க்கை குறித்து மீண்டும் சிந்திக்க தூண்டியுள்ளது. வாழ்க்கை அனுபவங்களை சமூகத்தில் பொருத்திப்பார்க்கவும் வலியுறுத்தியுள்ளது.