
ஒரு பழம். மூன்று நிறங்கள். மூன்று சுவைகள்: கசப்பு, இனிப்பு மற்றும் புளிப்பு.
“அது இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கிறது. இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள மூட்டி பழம் கசக்கும். சிவப்பு நிறப்பழம் இனிக்கும். மஞ்சள் நிறப்பழம் இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையில் இருக்கும்” என்று பேபி ஆப்ரஹாம் கூறுகிறார். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வானபுரத்தைச் சேர்ந்தவர் அவர். “அதிக கசப்பாகவும், புளிப்பாகவும் உள்ள பழங்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. ஆதிவாசி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பழத்தை வயிறு மற்றும் தொண்டை தொடர்பான நோய்களுக்கு பயன்படுத்துகிறார்கள்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
இப்பழத்தின் ‘மூட்டி பழம்‘ என்ற பெயர் ‘மூட்டி‘ (கீழே) என்பதிலிருந்து உருவானது. மரத் தண்டு மற்றும் கிளை இரண்டிலும் பழங்கள் காய்க்கின்றன. கண்ணைக் கவரும் இதன் வண்ணங்கள் வனவிலங்குகளை ஈர்க்கின்றன. மூட்டி பழத்தை நாம் காடுகளில் காண முடியாது. ஏனெனில் அவை பழுத்தவுடனே அவற்றை கரடிகள், குரங்குகள், யானைகள் மற்றும் முதலைகள் சாப்பிட்டுவிடும் என்று பேபி கூறுகிறார்.
67 வயதான ஆப்ரஹாமுக்கு 36 வயது இருந்போது இந்த பழ மரத்தின் இரண்டு சிறிய மரக்கன்றுகளை அவரது சகோதரர் பரிசாக வழங்கினார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளின் காடுகளில் வசிக்கும் மூப்பன் என்ற மூத்த பழங்குடியினரிடம் இருந்து அவர் இந்த கன்றுகளை பெற்று வந்தார். தற்போது அவரிடம் 200க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் கன்றுகள் இருக்கின்றன. முதலில் நடப்பட்ட இரு செடிகளும் அருகருகே நடப்பட்டன. இதனால் அவை இரண்டு ஒன்றோடுடொன்று பின்னிக்கொண்டன. எனவே விதைகளை இரண்டுஅடி ஆழத்திலும், ஒவ்வொரு செடிக்கும் 5 மீட்டர் இடைவெளியும் விட்டு நடவேண்டும் என்று ஆப்ரஹாம் அறிவுறுத்துகிறார். அப்போதுதான் அவை நல்ல விளைச்சலை கொடுக்கும் என்கிறார். மழைக்காலம் முடிந்த பின் நடுவது உகந்தது என்றாலும், எந்தக் காலத்திலும் நட ஏற்றவை அவை. “நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குப்பின்னர் பூ பூக்கத் துவங்கும். நன்றாக வளர்ந்த மரம் 50 கிலோ வரை பழங்கள் கொடுக்கும். சிறிய மரங்கள் 15 கிலோ வரை பழங்களை தரும்“ என்று அவர் கூறுகிறார்.


ஒரு ஏக்கர் நிலத்தில ரப்பர், அவுரி போன்ற பணப்பயிர்களையும் மூட்டி பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், நெல்லி, எலுமிச்சை போன்ற பழவகைகளையும் மரவள்ளி, மஞ்சள், ஆரோ ரூட் போன்ற வேர்ப்பியிர்களையும் ஜாதிக்காய் போன்ற மசாலா பயிர்களையும் ஆப்ரஹாம் பயிரிட்டுள்ளார். “எனது குடும்பத்தினரான எனது மனைவி, மகன் ஜெரின் மற்றும் மகள் ஜென்டினா ஆகியோரும் விவசாயம் செய்தவற்கு எனக்கு உதவுகிறார்கள்“ என்று அவர் கூறுகிறார். “நாங்கள் கூலித்தொழிலாளர்களை வைத்துக் கொள்வதேயில்லை. நாற்றுகளுக்கு பந்தல் அமைப்பதில் இருந்து கற்களை அகற்றுவது வரை எல்லாவற்றையும் நாங்களே செய்கிறோம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
மூட்டி மரங்கள் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக இருப்பதால், ஆப்ரஹாம் அவற்றிற்கு இயற்கை உரங்களையே ஆண்டிற்கு இருமுறை இடுகிறார். வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் இடுகிறார். “நாங்கள் மாட்டுச்சாணம், மண்புழு உரம் மற்றும் கடலை பிழிந்து எண்ணெய் எடுத்தவுடன் அதிலிருந்து கிடைக்கும் புண்ணாக்கு ஆகியவற்றை உரமாக பயன்படுத்துகிறோம். மூட்டி மரங்கள் பூக்கத் துவங்கிவிட்டால் அடிக்கடி தண்ணீர்விட வேண்டும். எனவே கோடை காலங்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுவோம்” என்று அவர் கூறுகிறார். வவ்வால்களிடம் இருந்து பழங்களை காப்பாற்றுவதற்காக மரங்களைச்சுற்றி வலைகளை அமைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரது நாற்றுப்பண்ணையில், இரண்டு மரக்கன்றுகளை ரூ.250க்கு விற்கிறார். மூட்டிப்பழம் (லத்தீன் மொழியில் பக்காரியா கோர்ட்டாலெனிசிஸ் என்று அழைக்கப்படுகிறது) மூட்டி காய்ப்பன், மூட்டி புலி மற்றும் மெராடக்கா என்றும் உள்ளூர் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பழங்களை ஒருமுறை பறித்தபின் அவை இரண்டு மாதங்களுக்கு இருக்கும். உள்ளே இருக்கும் சதை மட்டும் சற்று சுருங்கிவிடும். உள்ளூர்வாசிகள் உள்ளே உள்ள சதையிலிருந்து ஊறுகாய் செய்வார்கள். வெளிப்புறத் தோலில் இருந்து வைன் செய்யப்படுகிறது. இதில் தேனை குழைத்து ஆதிவாசிகள் தேன் மூட்டி என்ற இனிப்பு குழம்பை செய்கிறார்கள்.


“மூட்டி தனித்தன்மை வாய்ந்தது. மகரந்தச் சேர்க்கைக்கு ஆண் மரத்திற்கு அருகே பெண் மரமும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் வளரும் பழங்களில் வெளிப்புற தோல் மட்டும் இருக்கும். உட்புறம் சதை இருக்காது. மகரந்தச்சேர்க்கை, காற்று மற்றும் சிறிய தேனீக்கள் மூலம் நடைபெறும்” என்று ஆப்ரஹாம் கூறுகிறார். தோராயமாக நான்கு ஆண்டுகளில் ஆண் மரம் முழுவதும் பூக்களால் சூழப்படும். உடனடியாக பெண் மரம் பழங்களால் சூழப்படும். அது திராட்சை பழக்கொத்து அருவியாகக் கொட்டுவது போல் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும். ஜனவரி மாத இறுதியில் துவங்கி ஆகஸ்ட் மாத இறுதி வரை பழங்கள் கொடுக்கும்.
“மரங்கள் வளர்க்கும் மற்றவர்கள், அவர்கள் விளைவிக்கும் பழங்களில் ஓடு மட்டும் இருப்பதாக சொல்கிறார்கள். உள்ளே சதை இருப்பதில்லை. இது ஆண் மரம் அருகில் இல்லாததால் ஏற்படுகிறது. நான் விதையை வைத்தே ஆண் மரமா பெண் மரமா என்று கண்டுபிடித்து விடுவேன். அது மரக்கன்றாக வளர்ந்துவிட்டால் கண்டுபிடிப்பது கடினமாகும்” என்று ஆப்ரஹாம் கூறுகிறார். அவரிடம் அடிக்கடி மரம் வளர்ப்பவர் இதுகுறித்து சந்தேகங்கள் கேட்கிறார்கள்.
மூட்டி மரத்தின் உயரமும் மாறுபடும். மஞ்சள் நிறத்தில் பழம் கொடுக்கும் வகை மரம் காடுகளில் காணப்படும். 10 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரும். ஆப்ரஹாம்மின் வீட்டில் அது 7 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. இந்த மரங்கள் கொல்லம் மாவட்டம் பதனபுரம் தாலுக்காவிலும், இடுக்கி மாவட்டம் அரக்குளம் கிராமத்திலும் உள்ளன. “2019ம் ஆண்டு வேளாண் அமைச்சர் வி.எஸ். சுனில்குமார் இவற்றை வந்து பார்வையிட்ட பின்னர்தான் மக்கள் மூட்டி பழங்களை கவனிக்கத் துவங்கினார்கள்” என்று அவர் கூறுகிறார். அமைச்சரின் வருகையைத் தொடர்ந்து இந்தப் பழத்தை பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து சென்றனர். தொடர்ந்து உள்ளூர் ஊடகங்களும் இதுகுறித்த செய்திகளை வெளியிடத் துவங்கின.



“கேரளாவில் ஆதிவாசியின மக்கள் இப்பழங்களை சாலையோரத்தில் வைத்து விற்கிறார்கள். அவற்றை நீங்கள் சந்தைகளில் காணமுடியாது” என்று ஆப்ரஹாம் கூறுகிறார். “பழங்களை வழக்கமாக கிலோ ரூ. 100 முதல் 150க்கு வாங்கும் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு இருப்பார்கள். இந்தப் பழம் டிராகன் பழம், ரம்பூட்டான் போன்ற வெளிநாட்டு வெப்ப மண்டல பழங்களின் சுவையைp போல் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்” என்று அவர் மேலும் கூறுகிறார். அருகிலுள்ள மாநிலங்களுக்கு பழங்களை அவர் கொரியர் மூலம் அனுப்புகிறார்.
மூட்டி மரத்திற்கு அதிக சூரிய ஒளியும், இடமும் தேவையில்லை என்பதால், சிறிய நிலங்கள் வைத்திருப்பவர்களுக்கும், நகரங்களில் வசிப்பவர்களுக்கும் இம்மர வளர்ப்பு உகந்ததாக இருக்கும். கண் கவர் வண்ணங்களில் பழங்களை கொடுக்கும் இம்மரத்தை வளர்ப்பதற்கு நிறைய பேர் ஆர்வமாக வருவார்கள் என்று ஆப்ரஹாம் நம்புகிறார்.
Editor's note
ஜோ பால் சி.எஸ்., ஷில்லாங்கின் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பியல் இறுதியாண்டு மாணவர். அவர் முதலில் மூட்டி பழம் குறித்த செய்தியை மண்டல விவசாயிகள் வார இதழிலில் பார்த்திருக்கிறார். அதுகுறித்து அவர் மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். அவர் கூறுகையில், பாரியுடன் இணைந்து பணிபுரிந்ததில், நாம் அடிக்கடி படிக்கும் செய்திக் கட்டுரைகளை எழுதுவதற்கு அதிகளவிலான விவரங்கள் தேவைப்படும் என்பதையும் அப்பணி சிக்கல்கள் நிறைந்த ஒன்று என்பதையும் புரிந்துகொண்டேன். இந்த செய்திக்கட்டுரையை நான் எழுதியதன் மூலம் நிறைய விஷயங்கள் குறித்து தெரிந்துகொண்டேன் என்கிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.
பிரியதர்சினி. R. மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.