
இந்தாண்டின் துவக்கத்தில், ஷாஹாஜி தனுரே, ஹராலி கிராமத்தில் உள்ள தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் புதிய ஆழ்துளைக்கிணறு அமைக்க வேண்டும் என முடிவு செய்தார். அவர் தனது பயிர்களை எண்ணி கவலைகொண்டார். அவரது வயலில் உள்ள திறந்த நிலை கிணறு முற்றிலும் வற்றிவிட்டது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஒஸ்மனாபாத் மாவட்டத்தில் கோடை காலங்களில், வெப்பத்தால் வறண்டு 40 டிகிரி செல்சியசை கடந்து வெப்பம் நிலவும். ஆழ்துளை கிணற்றின் உதவியோடு, அவர் நல்ல அறுவடையை பெற்றுவிடலாம் என்று எண்ணினார். ஒரு தேசியளவிலான ஊரடங்கு மற்றும் கடுமையான பருவமற்ற மழை அவரது திட்டங்களை தலைகீழாக மாற்றிவிடும் என்பது ஷாஹாஜிக்கு தெரியவில்லை.

மார்ச் மாதத்தில், ஷாஹாஜி அவரது ஆழ்துளை கிணற்றுக்கு ரூபாய் 1.2 லட்சம் செலவழித்தார். அதற்காக, அவரது மனைவி புஷ்பா ஷாஹாஜி தனுரே உறுப்பினராக உள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்து ரூ.25 ஆயிரத்தை 2 சதவீத மாத வட்டிக்கு கடனாக பெற்றார். மேலும் 50 ஆயிரம் ரூபாயை 5 சதவீத மாத வட்டிக்கு உள்ளூர் வட்டிக்காரரிடம் கடனாகப் பெற்றார். எஞ்சிய தொகையை அவரது சேமிப்பில் இருந்து எடுத்துக்கொண்டார். அவரிடம் விளையும் காய்கறிகளை விற்று, அந்தக்கடனை திருப்பி செலுத்துவதற்கு திட்டமிட்டிருந்தார். அவரது வருமானம் முற்றிலும் நின்றவுடன், ஷாஹாஜி அவரது கடனை செலுத்த தவறிவிட்டார். அவரால் ஒரு தவணையை கூட செலுத்த முடியவில்லை.
ஏன் வங்கியில் கடன் பெறவில்லை என்ற கேள்விக்கு, “மராத்வாடா கிராமின் வங்கியில் எனக்கு கணக்கு உள்ளது. ஆனால், அவர்கள் நிறைய ஆவணங்களை கேட்கிறார்கள். கடன் பெறுவதற்கு எண்ணற்ற முறை அலைய வேண்டியுள்ளது. ஆனால், வட்டிக்கு உள்ளூர் ஆட்களிடம் பெறுவது எளிதானது“ என்று பதிலளிக்கிறார்.
ஷாஹாஜி தனது 60 வயதுகளில் உள்ளார். அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவரது மகள் அனிதா காலே (37), திருமணமாகி ஒஸ்மனாபாத் நகரில் வசிக்கிறார். அவரது மகன் சிவாஜி தனுரே (35), அவரது மருமகள் அர்ச்சனா (28). அவர்களுடன் வசிக்கிறார்கள். வயல் வேலைகளில் சிவாஜியும், அர்ச்சனாவும் அவருக்கு உதவியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அபிஷேக் (15), ஆசிர்வாத் (9) மற்றும் ஓம்கார் (7) என மூன்று மகன்கள் உள்ளனர். மூவரும் அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கின்றனர்.

“எனது குடும்பம் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ளது (வாழ்வாதாரத்திற்கு). எங்களுக்கு வேறு எந்த வருமானமும் கிடையாது. எங்களது விளைச்சல் விற்கவில்லையென்றால், வாழ்வே கடினமாகிவிடும்“ என்று ஷாஹாஜி கூறுகிறார். ஹராலி கிராமத்தில், பணிசெய்யும் மொத்த மக்கள் 1,252 பேரும் விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலித்தொழிலாளர்கள் என்று 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒஸ்மனாபாத் மாவட்டத்தில் 77 சதவீதம் பேர் முதன்மை துறையை சார்ந்துள்ளனர்.
இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள டெர்னா ஆற்றில் சிறிய அணை ஒன்று உள்ளது. எனினும், ஹராலிக்கு எதிர் திசையில் பாய்வதால், இங்குள்ள விவசாயிகளுக்கு அந்த தண்ணீர் கிடைக்காது. மாறாக, அவர்கள் கிணற்றுப்பாசனத்தை நம்பியே உள்ளனர். நல்ல மழை பொழியும்போது, கிணற்றில் தண்ணீர் கிடைக்கும். மஹாராஷ்ட்ராவின் மராத்வாடா பகுதி சில வறட்சிகளை சந்தித்துள்ளது. அதில் 2012 முதல் 2014ம் ஆண்டு வரை ஏற்பட்ட வறட்சி கடுமையானது. மிக சமீபத்தில் 2015ல் கூட விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்திருந்தன
ஷாஹாஜி தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் ஆண்டு பயிர்களான சோயா பீன்ஸ், சோளம், கோதுமை மற்றும் காய்கறிகளை பயிரிட்டுள்ளார். அவர் வெங்காயம் மற்றும் மற்ற காய்கறிகளான வெண்டைக்காய், வெந்தயக்கீரை, பசலைக்கீரை உள்ளிட்டவற்றை தாலுகா தலைநகர் லோஹாராவில் உள்ள மண்டியில் விற்பனை செய்துவருகிறார். வாரமொரு முறை மண்டிக்கு பஸ்சில் பயணம் செய்வதற்கு ரூ.200 செலவு செய்கிறார்.
ஷாஹாஜியின் 550 அடி ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்ட சில வாரங்களில் மார்ச் 23ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரால் பயணிக்க இயலவில்லை. அவர் அறுவடை செய்து வைத்திருந்த காய்கறிகள் வீணாகத்துவங்கிவிட்டன. அவர் உள்ளூர் மண்டியில் விற்பனை செய்ய முடிந்ததை விற்றார். “பசலை கீரை, வெந்தையக் கீரை போன்றவை வழக்கமாக 250 கிராம் ரூ.10க்கு விற்பனையாகும். ஊரடங்கால், 3 முதல் 4 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பச்சை மிளகாய் வழக்கமாக கிலோ ரூ.40க்கு விற்பனையாகும். ஆனால், அதில் பாதி விலையைவிட குறைவாகத்தான் விற்க நேர்ந்தது.“ என்று ஷாஹாஜி கூறுகிறார்.

“எனது பெரும்பாலான வெங்காயங்கள் அழுகின. சிறிதளவு மட்டும் உள்ளூரில் கிலோ ரூ.8 முதல் 10க்கு விற்க முடிந்தது“ என்று தான் மார்ச் மாதத்தோடு முடிவடைந்த ரபி பருவத்தில் பயிரிட்ட வெங்காயங்களை குறிப்பிட்டு அவர் கூறுகிறார். ஷாஹாஜிக்கு ரபி பருவத்தில் சராசரியாக 1,250 கிலோ வெங்காயம் கிடைத்தது. “வெங்காய விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அது ஒரு சூதாட்டம்போலத்தான். அவற்றை நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், கிலோ ரூ.50 முதல் 60க்கு விற்கலாம். ஆனால், கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை கூட குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஊரடங்கின் போது நான் நிறைய பணம் இழந்திருக்கிறேன்“ என்று அவர் கூறுகிறார்.
ரபி பருவத்தில் ஷாஹாஜி, சோளம் மற்றும் கோதுமையை அவரது குடும்பத்திற்காக பெரியளவில் பயிரிட்டார். காரீப் பருவத்தில் அவர் சோயா பீன்ஸ் பயிரிட்டார். அவர், ஹராலியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லட்டூர் மண்டியில் அவற்றை விற்பனை செய்தார். அவரது கிராமத்தில் உள்ள மற்ற விவசாயிகளுடன் சேர்ந்து மார்க்கெட்டிற்கு எடுத்துச்சென்றார். அவர்கள் பயணச்செலவை பகிர்ந்துகொண்டனர்.
பயிர் மூலம் கிடைக்கும் வருமானம் தாமதமாகும்போதும், கணிக்க இயலாதபோதும், பாலின் மூலம் கிடைக்கும் வருமானம் தினசரி செலவுகளுக்கு பயன்படுத்தப்படும். ஷாஹாஜியிடம் ஒரு ஜெர்சி பசுவும், கன்றும், ஒரு எருமைக்கன்றும் உள்ளது. “எங்கள் மாடு நாளொன்றுக்கு 10 லிட்டர் பால் கொடுக்கும். இதன் மூலம் ஊரடங்குக்கு முன்னர் எங்களுக்கு ரூ.250 முதல் ரூ.280 வரை வருமானம் கிடைத்தது“ என்று அர்ச்சனா, ஷாஹாஜியின் மருமகள் கூறுகிறார். ஊரடங்கால் பெரும்பாலான உணவகங்களும், இனிப்பு கடைகளும் மூடப்பட்டதால், பாலுக்கான தேவை குறைந்து, விலையும் வீழ்ந்தது. “எங்களால் பாலை லிட்டர் ரூ.25 முதல் ரூ.18க்கு விற்பனை செய்ய முடியவில்லை. எனவே எங்களின் தினசரி வருமானம் இல்லாமல் போய்விட்டது“ என்று ஷாஹாஜியின் மனைவி புஷ்பா கூறுகிறார்.
மழையினால் தள்ளிவைப்பு
ஹராலி விவசாயிகள் ஜீன் மாதத்தில் காரீப் பருவ விதைகளை விதைப்பார்கள். ஆனால், இந்தாண்டு காய்கறிகளை விற்று வந்த சிறிய வருமானத்தால், அவர்கள் கையிருப்பில் கொஞ்சம் பணமே இருந்தது. இந்தப்பகுதியில் பெரியளவிலான காரீப் பருவ பயிர் சோயா பீன்ஸ். முதல் மழை வந்த உடனே, ஜீன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் விதைகளை வாங்கியதாக ஷாஹாஜி கூறுகிறார். “விதைகளின் விலையும் அதிகரித்துவிட்டது. கடந்தாண்டு 2 பைகள் (ஒவ்வொன்றும் 30 கிலோ) சோயா பீன்ஸ் விதைகள் ஒவ்வொன்றும் தலா ரூ.1,700க்கு வாங்கினேன். இந்தாண்டு ரூ.2,200க்கு விற்கப்படுகிறது.“
ஹராலியில் உள்ள வேளாண் பாலிடெக்னிக் கல்லூரியின் பேராசிரியரும், அவ்வூரைச் சேர்ந்தவருமான மகேஷ் ராஜே கூறுகையில், “ கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் (2019) மாதங்களில் சோயா பீன்ஸ் செடிகள் பருவமல்லாத மழையில் நனைந்தது. அதன் விளைவாக சோயா பீன்ஸ் விதை தயாரிப்பு வீழ்ந்தது. எனவே விதை விலை அதிகமாக உள்ளது“ என்றார்.

இந்தாண்டும் ஹராலியில் அக்டோபர் மாதத்தில் பருவமல்லாத கனமழை பெய்தது. “15 நாட்களுக்கு தொடர்ந்து மழை பொழிந்தது. எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது“ என்று அர்ச்சனா கூறுகிறார். அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பெய்த மழையின் அளவு 234 மில்லி மீட்டர். ஆண்டு சராசரி மழையில் மூன்றில் ஒரு பங்கு இரண்டே நாளில் பெய்திருந்தது. “மழை பொழிய துவங்கியபோது, நாங்கள் பயிரை அறுவடை செய்வதற்கு தயாராக இருந்தோம். ஆனால் மழை நிற்கவேயில்லை. சோயாபீன் பயிர் அனைத்தும் நீரில் மூழ்கியது. நாங்கள் 500 கிலோகிராம் அறுவடையை எதிர்பார்த்தோம். ஆனால், கிடைத்தது 200 கிலோகிராம் மட்டுமே. எங்கள் காய்கறிகள், பூ பூத்திருந்த மிளகாய் கூட மழையால் நாசமாக்கப்பட்டது. வறட்சி காலத்தில் கூட இழப்பை ஈடுகட்ட எங்களுக்கு சில வழிகள் இருக்கும். ஆனால், அறுவடை நேரத்தில் எதிர்பாராமல் திடீரென்று ஏற்பட்ட இந்த அதிகனமழை மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது“ என்று ஷாஹாஜி கூறுகிறார். அவர்களின் சோயா பீன்ஸ் பயிர்கள் கடுமையான பாதிக்கப்பட்டுவிட்டது.
2020 விவசாய மசோதா
விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் வரை அவற்றை இருப்பு வைத்திருக்க முடியும். ஷாஹாஜி கடந்தாண்டு விளைச்சலைக்கூட மார்ச் 2020 வரை விலை ஏறி வந்ததால் வைத்திருந்தார். “மார்ச் மாதத்தில் சோயா பீன்ஸ், குவிண்டால், ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,500 வரை விற்றது. நாங்கள் ரூ 5 ஆயிரம் வரை விலை உயரும் என்று எதிர்பார்த்தோம். மாறாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர் விலை வீழ்ந்தது“ என்று ஷாஹாஜி கூறுகிறார். இன்று சோயா பீன்சின் விலை குவிண்டால் ரூ.3 ஆயிரம் ஆகும். அடுத்த விதைக்கும் காலத்திற்கு தேவையான விதைகள் வாங்குவதற்காக ஏற்கனவே அவர் 10 பைகளை, லட்டூர் வேளாண் விளைபொருள் சந்தை மையத்தில் விற்றுவிட்டார். புதிய விவசாய மசோதா அவருக்கு ஏதேனும் மாற்றத்தை வழங்குமா என்று கேட்டதற்கு, “நாங்கள் இந்த சந்தையில் பல ஆண்டுகளாக விளைபொருட்களை விற்று வருகிறோம். வேறு எங்கும் விற்பதற்கு எங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை“ என்று கூறினார்.
பேராசிரியர் ராஜே விவசாயிகள் புதிய மசோதாக்கள் குறித்து பேசுகையில், “வேளாண் விளைபொருள் சந்தை மையத்தில் தங்கள் விளைச்சலை விற்பதற்கு பழகிவிட்டனர். அவர்கள் எளிதாக மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வேளாண் விளைபொருள் சந்தை மையத்தில் உள்ள இடைத்தரகர்கள் ஏமாற்றுவது அவர்களுக்கு தெரியாது அல்லது அதை உணரமாட்டார்கள். எவ்வாறு நாம் தனியார் மருத்துவமனைக்கும், அரசு மருத்துவமனைக்கும் இடையே வேறுபாட்டை பார்க்கிறோமோ, அதேபோல், தனியார் மண்டிக்கும், அரசு மண்டிக்கும் உள்ள வித்யாசத்தை எதிர்காலத்தில் வேண்டுமானால் ஒருவர் உணரலாம். இங்குள்ள விவசாயிகளுக்கு சிறிய அளவிலே நிலம் உள்ளது. ஒப்பந்த விவசாயத்தில் பேரம் பேசும் அதிகாரம் இருக்குமா என்பது எனக்கு ஐயமாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
டிசம்பர் 2019ம் ஆண்டு மஹாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ள ஜோதிராவ் புலே விவசாயிகள் கடன் தள்ளுபடியால் ஏற்படக்கூடிய நன்மைகள் அவருக்கு கிடைக்குமா என்றால், ஷாஹாஜி வங்கியில் இருந்து எவ்வித கடனும் பெறவில்லை என்பதால், தான் எவ்வித கடன் தள்ளுபடி திட்டத்திற்கும் தகுதியானவர் கிடையாது என்று அவர் கூறுகிறார். “கடவுள் தான் கடன் பிரச்னையில் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும்“ என்று அவர் கூறுகிறார்.
தமிழில்: பிரியதர்சினி.R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.
Editor's note
பக்தி கேல்கர், பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் இளநிலை பொருளியல் படிக்கிறார். வேளாண் துறையில் கோவிட் – 19ன் பாதிப்புகள் குறித்த அவரின் கல்லூரி பாடத்திற்கான பணியில் இருந்து இந்த கட்டுரை எழுதப்பட்டது. அவர், ஹராலியில் உள்ள ஜனானா ப்ரபோதினி நிறுவனத்துடன் சேர்ந்து, மராத்வாடா பகுதியில் உள்ள 5 கிராமங்களில் தனது ஆய்வை நடத்தினார். “எனது ஆய்வுக்காக நான் கணக்கெடுப்பு நடத்தியபோது, ஊரடங்கின் பாதிப்புகளை நன்றாக புரிந்துகொண்டேன். பாரிக்காக இந்த கட்டுரையை எழுதும்போது, ஊரடங்கு மற்றும் இயற்கை சீற்றம் ஆகியவற்றின் ஆழம் மற்றும் அதன் தீவிரம், விவசாயம் என்ற ஒரு துறையை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை உணர்ந்துகொண்டேன். ஒரு குறு விவசாயி எவ்வாறு பொருளாதார இழப்பை சந்தித்து கடனாளியாகியுள்ளார் என்பதும் புரிந்தது” என்று அவர் கூறுகிறார்.