“அரக்கு மரத்தில் இத்தகைய அலங்கார வேலைப்பாடுகளைக் காணும் மக்கள் பிரஷ், எண்ணெய் வண்ணங்கள் கொண்டு செய்யப்பட்டதா என கேட்கின்றனர்,” என்கிறார் குஜராத்தின் கச் மாவட்டம் நிரோனா கிராமத்தைச் சேர்ந்த இந்த 40 வயது அரக்கு மர கைவினைஞர் பாவிக் பச்சயா வதா. அரக்கு மர குச்சியை கடைசல் இயந்திரம் கொண்டு கடைந்தால் கலைடாஸ்கோப் போன்ற வளைந்த வடிவங்கள் கொடுக்கும் என்று அவர் விளக்குகிறார்.

பவிக் பாயின் இளைய மகள் அரக்கு மரத்தில் வண்ணமூட்டி தனது திறனை வெளிப்படுத்துகிறார். ஒளிப்படம்: அஷ்வின் சுரேஷ்

பவிக் பாய் (அவர் சமூகத்தில் அப்படிதான் அழைக்கப்படுகிறார்) 30 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கைவினை கலையைச் செய்து வருகிறார். “பம்பரம் செய்வதில் நான் வல்லுநர். நான் செய்யும் ஒவ்வொரு பம்பரமும் ஏழு நிமிடங்களுக்கு நன்றாக சுழலும், ” என்கிறார் அவர். நீங்கள் விரும்பும் நேரத்திற்கு சுழலும் பம்பரங்களையும் அவர் செய்து தருகிறார்.

அரக்கு மர கலையை நிரோனாவில் உள்ள ஆறு, ஏழு குடும்பங்கள் செய்து வருகின்றன. இந்திரா ஆவாஸ் யோஜா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கூடு போன்ற கான்கிரீட் வீடுகளில் அனைவரும் வசிக்கின்றனர். அனைத்து வீடுகளும் நெருக்கமாக ஒழுங்கற்ற அரை வட்ட வடிவத்தில் உள்ளன. வீடுகளுக்கு முன்னுள்ள காலியிடத்தில் அவர்கள் வேலை செய்கின்றனர்.

கச்சின் நிரோனாவில் உள்ள வீடு. அரை வட்ட வடிவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் பவிக் பாய் மற்றும் சில கைவினைஞர்கள் அரக்கு மரத்தில் கைவினைப் பொருட்களை செய்கின்றனர். ஒளிப்படம்: அஷ்வின் சுரேஷ்

“அரக்குமர கைவினைப் பொருட்கள் ராஜஸ்தான் போன்ற பிற மாநிலங்களிலும் செய்யப்படுகிறது,” என்கிறார் பவிக் பாய். “[மற்றவர்கள்] பெரும்பாலும் மரத்தில் ஒரு அடுக்கு வண்ணம் பூசுவார்கள். நாங்கள் வடிவத்திற்கு ஏற்ப இரண்டு முறை அல்லது அதற்கு மேலும் வண்ணங்கள் பூசுவோம். காலபோக்கில் எங்களுக்கென சொந்தமான வடிவங்களை வளர்த்துக் கொண்டோம்.”

பவிக் பாய் வாதா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் சொல்கிறார், “என் குடும்பமும், அவர் குடும்பமும் பாகிஸ்தானிலிருந்து புலம் பெயர்ந்தவை. என் தாத்தாவிற்கு ஏழு சகோதரர்கள் இருந்தனர். அனைவரும் பாகிஸ்தானில் இக்கலையை செய்து வந்தனர். இந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்குப் பயணம் செய்து தங்கியுள்ளோம். 2001 புஜ் பூகம்பத்திற்குப் பிறகு நாங்கள் நிரோனாவில் தங்கிவிட்டோம்.”

நாங்கள் அவரின் கிராமத்திற்குச் சென்றிருந்தபோது குடியிருப்பை சுற்றி வறண்ட வெப்பக் காற்று வீசிக் கொண்டிருந்தது. பெண்கள் அன்றாட வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு பெரியவர்களுடன் கம்பி கட்டிலில் தங்களின் கைகுழந்தைகளுடன் அமர்ந்தபடி மற்ற பிள்ளைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தனர். இங்குள்ள பிள்ளைகளில் பெரும்பாலானோர் பள்ளிக்குச் சென்றதில்லை என்று நம்மிடம் அவர்கள் தெரிவித்தனர். நிரோனாவின் 5710 பேர் கொண்ட மக்கள்தொகையில் 53 சதவீதம் பேர் மட்டுமே படிப்பறிவு பெற்றுள்ளனர். எனினும் பவிக் பாய், அவரது மனைவி ரஹிமா தங்களின் மூன்று மகன்களும் பள்ளிக்கு செல்ல வைக்கின்றனர். “என் மகள் ஜியோத்சனாவை இந்தாண்டு பள்ளிக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தேன். ஆனால் கோவிட் பெருந்தொற்றால் அது நடக்கவில்லை,” என்கிறார் அவர். ஜூலை மாதம் அவரது கிராமத்தில் மூன்று பேருக்கு கரோனா இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

கேமராவுடன் எங்களைப் பார்த்த இளம்பெண் ரேஷ்மா காத்திருக்க சொல்லிவிட்டு தனக்கு பிடித்த பூ தையல் போட்ட துணியை தலையிலும், தோளிலும் சுற்றிக் கொண்டு புகைப்படத்திற்கு இப்போது தயாராகிவிட்டதாக சிரிக்கிறார்.

கேமராவிற்கு நிற்கும் அப்பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா மற்றும் பிற பிள்ளைகள். ஒளிப்படம்: அஷ்வின் சுரேஷ்

பவிக் பாய் ஒருகாலத்தில் மல்யுத்த வீரராக இருந்து கச் முழுவதும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர். ஒருநாள் அவரது சகோதரரை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. “நான் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன்,” என்கிறார் அவர். “அரக்குமர கைவினைக் கலைக்காக என் தந்தை மாநில விருது வென்றுள்ளதாகவும், அதை நாங்கள் இருவரும் காவல்நிலையம் வந்து பெற்றுக் கொள்ளுமாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த அங்கீகாரத்திற்குப் பிறகு நான் இந்த கைவினைக் கலையை தீவிரமாக செய்ய தொடங்கிவிட்டேன்.”

பவிக் பாயின் மூன்று மகன்களும் இக்கலையை அவரிடம் கற்று வருகின்றனர். “அவர்களின் உதவியோடு ஒரு நாளில் மூன்று முதல் நான்கு பொருட்களை நான் செய்துவிடுகிறேன்,” என்கிறார் அவர். அவரது மூத்த மகனான 17 வயதாகும் தாஞ்சி எளிய சமையல் பாத்திரங்களைச் செய்கிறார். அவர் தனது படைப்புடன் திரைப்படம் ஒன்றிலும் இடம்பெற்றுள்ளார். ஜெயேஷ்பாய் ஜோர்டார் என்ற அப்படம் 2020ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

கைவினை

அரக்குமர கட்டைகளை கைவினைப் பொருளாக மாற்றுவதற்கு முதலில்   விரும்பிய வடிவில் செதுக்கி கடைசல் இயந்திரத்தில் கடைகின்றனர். மரக் குச்சிக்கும், கடைசல் இயந்திரத்திற்கும் இடையே ஏற்படும் வெடிப்பு பல வண்ண அடுக்குகளைத் தருகிறது. இறுதியாக கவர்ச்சிகரமான தோற்றத்திற்கு எண்ணெய் கொண்டு அரக்கு மர துண்டின் மீது பூசப்படுகிறது.

முன்பெல்லாம் காடுகளில் மரங்களை எடுத்துக்கொள்வோம். உள்ளூரில் கிடைக்கும் கருவேல மரத்தையும் பயன்படுத்துவோம். “இப்போதெல்லாம் தோட்டங்களில், பண்ணைகளில் மரம் எடுக்க அனுமதி தேவைப்படுகிறது. இதற்காக நாங்கள் கட்டணமும் செலுத்துகிறோம்,” என்கிறார் அவர். “இந்த மரங்கள் [பண்ணைகளில் இருந்து] பொதுவாக சிறியதாக இருப்பதால் சமையல் பாத்திரங்கள் செய்யவே பயன்படுத்துகிறோம்.”

நாற்காலி போன்ற பெரிய தயாரிப்புகளை செய்வதற்கு நாங்கள் புஜ் சந்தையில் பெரிய அளவுகளில் எளிதாக கிடைக்கும் மரத் துண்டுகளை வாங்குகிறோம். கச் மாவட்டத்தின் தலைநகரமான புஜ், நிரோனாவிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கச்சில் இலந்தை மரங்களில் இடும் முட்டைகளையும், தங்களையும் பாதுகாக்க அரக்குபூச்சிகள் வெளியிடும் பிசினிலிருந்து அரக்கு செய்யப்படுகிறது. இந்த லாக் மரங்களின் கிளைகளிலும் பூசப்படுகிறது. இவற்றை அகற்றி, இடித்து அசுத்தங்களை நீக்குகின்றனர். ஒரு கிலோ லாக்கை சுத்தம் செய்தால் 250 கிராம் அரக்குப் பொடி கிடைக்கும். 

இப்பொடியை வண்ண நிறமிகளுடன் சூடுப்படுத்தி கடலை எண்ணெயில் கலக்கின்றனர். ஆறியதும் இக்கலவை அரக்காக மாறுகிறது – கிரயான் போன்ற வண்ண குச்சியாகிறது. இப்பணியை பொதுவாக பவிக் பாயின் மனைவி ரஜிமா போன்ற வாதா பெண்களே வீட்டு வேலைகளுக்கு நடுவே செய்துவிடுகின்றனர்.

வெள்ளை, நீல நிறங்கள் மட்டும் ரசயானம் கொண்டு இப்போது செய்யப்படுகிறது. மற்றவை இயற்கை பொருட்களில் தயாரிக்கப்படுகிறது: மஞ்சள் நிறத்திற்கு மஞ்சளும், கருப்பு நிறத்திற்கு கரியும் சேர்க்கப்படுகிறது. “அடிப்படை வண்ணங்களில் கலவை செய்து புதிய வண்ணங்களை நான் உருவாக்குகிறேன் – மஞ்சளும், சிவப்பும் சேர்ந்தால் ஆரஞ்சு நிறம் வந்துவிடும்” என்கிறார் பவிக் பாய்.

பரம்பரையாக தொடரும் திறன்

“மரத்தின் மீது அரக்கு பூசுவது போன்ற பாரம்பரிய திறன்கள் ஒருபோதும் கற்றுத்தரப்படுவதில்லை,” என்கிறார் பவிக் பாய். “உங்களது பெற்றோரிடம் கவனித்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.” 76 வயதாகும் தனது தந்தையான பச்சயா கமிஷா வாதாவை கவனித்து கற்றுக் கொண்டதை அவர் நினைவுகூர்கிறார், அலங்கார கட்டில் (மர சட்டகத்தின் மீது பருத்தி டேப் அல்லது கயிறு கொண்டு பின்னி செய்யும் பாரம்பரிய படுக்கை), செந்தூரம் (குங்குமம்) வைக்கும் பெட்டிகள், திருமணத்திற்கான பிற பரிசுப் பொருட்கள் போன்றவற்றை செய்ய கற்றுக் கொண்டார். “இதற்கு கட்டணமாக எங்களுக்கு துணிகள், தானியங்கள் அல்லது பணம் கொடுப்பார்கள்,” என்கிறார் அவர்.

இக்கைவினைக் கலைக்கு மெல்ல அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது, பவிக் பாயின் தந்தை உருட்டு கட்டைகள், இடிக்கும் பொருட்கள், கரண்டிகள், கலவை கரண்டிகள் போன்றவற்றை செய்ய தொடங்கினார். 60 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வந்த அவரது தந்தை இப்போது தளர்ந்து கண் பார்வையும் குறைந்துள்ளார். இதனால் இந்த நுட்பமான பணியைத் தொடர்வதில் அவருக்கு சிரமம் உள்ளது.

இக்கைவினையிலிருந்து ஒரு நாளுக்கு ரூ.150க்கும் குறைவான தொகையே கிடைப்பதால், பவிக் பாய் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தையில் மூட்டை தூக்குவது போன்ற கூலி வேலைகளையும் செய்கின்றனர். “என் தந்தை மோசமான காலங்களை சந்தித்துள்ளார், நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது சில சமயம் மூன்று, நான்கு நாட்கள் இரவு பட்டினியில் உறங்கியிருக்கிறோம்,” என்கிறார் அவர்.

சந்தைப்படுத்தல், விநியோக அமைப்புகள் என எதையும் அவர்கள் வளர்த்தெடுக்கவில்லை என்பதால் கச்சின் சுற்றுலா காலம்தான் பொருட்களை விற்பதற்கான ஒரே வாய்ப்பு. அவரைப் போன்ற வாதா கைவினைஞர்கள் அரக்கு மர கைவினைப் பொருட்களை விளம்பரப்படுத்தி, விற்கும் நிறுவனங்களான காமிர், குக்மா சார்ந்த நிறுவனங்களில் பணி செய்வதால் இப்போது நிலைமை சீரடைந்துள்ளது. கைவினைப் பொருட்களுக்கான மூலப் பொருட்கள் வாங்குவதற்கு, விலை நிர்ணயித்து, சந்தைப்படுத்தல் போன்றவற்றிற்கு காமிர் உதவுகிறது.

சமையல் பாத்திரங்கள், மரச்சாமான்களுடன் இக்கைவினைஞர்கள் புதிய வடிவங்களையும் தேவைக்கேற்ப பொருட்களையும் உருவாக்குகின்றனர். சில சமயம் வாடிக்கையாளர்கள் இவர்களிடம் தேவையை ஓவியமாக தருகின்றனர். அகமதாபாத், மும்பை, போபால் போன்ற நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களிடம் தொடர்புகொள்ள பவிக் பாய் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார். நகரங்களில் நடக்கும் கண்காட்சிகளில் அவரும், அவரைப் போன்ற கைவினைஞர்களின் குடும்பத்தினரும் நேரடியாக சென்று பொருட்களை விற்கின்றனர்.

மரத் துண்டில் பூசப்பட்டுள்ள அரக்கு; கச்சின் வாதா சமூகத்தினர் செய்துள்ள சமையல்பாத்திரங்கள். ஒளிப்படம்: அஷ்வின் சுரேஷ

இன்றும் நிரோனாவில் உள்ள வாதா சமூகத்தைச் சேர்ந்த பவிக் பாய் உள்ளிட்ட 15 பேர் இக்கைவினைக் கலையில் ஈடுபட்டு வருகின்றனர்; அருகில் உள்ள மிஷரியாடோ கிராமத்தில் அவர்களின் உறவினர் இக்கலையை செய்கிறார். சுற்றுலா வர்த்தகத்தை நம்பியே உள்ளதால் ஊரடங்கு காலத்திலும், சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலங்களிலும் பல சவால்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர். நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பைத் தேடி வாதா சமூகத்தினர் பலரும் இடம்பெயரத் தொடங்கிவிட்டனர்.

பவிக் பாய் இப்போதும் நம்பிக்கையுடன் இருக்கிறார். தனது குழந்தைகளுக்கு இக்கலையை கற்றுத் தருவதோடு, பயிற்சி வகுப்புகள், பயிற்சி பட்டறைகளையும் அவர் நடத்துகிறார். தனது சமூக கலைஞர்கள் நகை வடிவமைப்பு, மரச்சாமான்கள், போன்ற புதுமைக்கான துறைகளிலும் உலகெங்கும் பேசி உரையாடுவதால் இழந்த பெருமையை மீட்டு வருவதாக அவர் நம்புகிறார். “என் வாடிக்கையாளர்கள் என் பணியை பாராட்டுகின்றனர். இதனால் இக்கைவினையை மேம்படுத்தி தொடர்வதற்கு நான் ஊக்கம் கொள்கிறேன்,” என்கிறார் அவர்.

Editor's note

சுரபி சிங்காய் பெங்களூருவில் உள்ள சிருஷ்டி கலை, வடிவம், தொழில்நுட்பத்திற்கான நிறுவனத்தில் தகவல் கலை மற்றும் தகவல் வடிவமைப்பு நடைமுறைகள் துறையில் முதலாமாண்டு மாணவர். விவரிப்புகள், மூழ்குதல் மற்றும் தகவல்என்ற தலைப்பிலான தனது களப்பணியின் பகுதியாக இவர் கைவினைஞர்களின் பயணத்தை தேடி கச்சில் அரக்கு மர கைவினைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். அவர் சொல்கிறார்: “பாரியின் உதவியோடு என்னால் செயல்முறைகள் மற்றும் சவால்களுக்கு கவனம் செலுத்தி ஆழமாக ஆராய்ந்து சிறந்த காட்சி விளக்கத்திற்கு மாற்ற முடிகிறது. எனது நேர்காணல் செயல்முறையை மீண்டும் செய்து, கேள்விகளை மறுவடிவமைத்தேன், கைவினை பற்றி மேலும் விவரங்களைச் சேர்க்க தொடர் அழைப்புகளை செய்தேன்.”

தமிழில்: சவிதா 

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளைச் செய்து வருகிறார்.