
ஷைலேந்திர பஜ்ரே, அவரது வயல்களை குறித்து பேசும்போது மிக வருத்தமாகவே இருக்கிறார். அவர் நிலத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த வேலையும் செய்ய முடியவில்லை. “இங்கு ஒரு குப்பை கிடங்கு உள்ளது. அங்கிருந்து வரும் நச்சுக்கழிவுகள் அனைத்தும் நிலத்தடி நீருடன் கலக்கிறது. ஆழ்துளை கிணறுகளில் இருந்து வரும் தண்ணீர் அனைத்தும் அசுத்தமானதாக உள்ளது. அதை நாம் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது. அது பயிர்களையும், மண்ணையும் நாசமாக்குகிறது“ என்று அவர் கூறுகிறார்.
பஜ்ரே குறிப்பிடும் அந்த குப்பைக்கிடங்கு அவரது கிராமத்தில்தான் உள்ளது. அவரது கிராமம் புனேவில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உருளிதேவாச்சி ஆகும். கிராமத்தைச் சுற்றியும் உள்ள குப்பை மேடுகள் உண்மையான மலைகளைப் போலவே காட்சியளிக்கின்றன. உண்மையில் அவை குப்பை குவியல்கள், பள்ளிகள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன.
மஹாராஷ்ட்ர அரசு, புனே நகரின் குப்பைகளை கொட்டுவதற்கு, உருளி தேவாச்சி கிராமத்தில் 43 ஏக்கர் நிலத்தை 1981ம் ஆண்டு வழங்கியிருந்தது. மேலும், நகரில் அதிகரித்து வரும் குப்பையை கையாள்வதற்கு, 2003ம் ஆண்டு 120 ஏக்கர் நிலத்தை புர்சுங்கி கிராமத்திற்கு அருகில் கொடுத்தது. 2014ம் ஆண்டு மார்ச் மாதம் வரை புனே நகராட்சி 1,100 டன் குப்பையை இந்த இரண்டு இடங்களிலும் கொட்டி வந்தது. கிராமத்தினர் நீண்ட, தொடர் போராட்த்திற்கு பின்னர், அங்கு கொட்டப்படும் குப்பையின் அளவு 500 டன்னாக அக்டோபர் 2015ம் ஆண்டு முதல் குறைக்கப்பட்டது.
குறைந்தளவே கொட்டப்படுவது, காற்று மற்றும் நீர் மாசு அதிகரிப்பதை கட்டுப்படுத்தவில்லை. 2014ம் ஆண்டு அக்கிராம மக்கள், அசீம் சரோடே என்ற வக்கீல் மூலமாக தேசிய பசுமை தீர்ப்பாய மேற்கு மண்டல கிளையில் மனு தாக்கல் செய்தனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அடுத்தக்கட்ட விசாரணை ஆகஸ்ட் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அங்கு கொட்டப்படும் கழிவுகள் முறையாக பதப்படுத்தப்படாதததால், அதிலிருந்து நிலத்தில் ஒழுகும் கழிவுநீர் நிலத்தடி நீரில் கலந்து அது விவசாயத்திற்கு உகந்ததாக இல்லாமல் செய்துவிடுகிறது. புர்சுங்கி கிராம ஊராட்சியின் உறுப்பினர் ரஞ்சித் ரஸ்கார் இந்த குப்பைகளிலிருந்து வடியும் கழிவுநீரின் தாக்கம் குறித்து பேசுகிறார். “எனது நிலத்தில் விளையும் காய்கறிகளில் காரியத்தன்மை அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது. உடல் நலத்தை பாதிக்கக்கூடும்“ என்று அவர் கூறுகிறார்.
புனேவைச் சேர்ந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் பார்த்தார பிஸ்வாஸ், இந்த பெரிய சுற்றுச்சூழல் பிரச்னை குறித்து விரிவாக எழுதியுள்ளார். அதில், கடந்த பல ஆண்டுகளாக இங்கு தரிசு நிலங்கள் அதிகரித்து வருவது குறித்து விவரித்துள்ளார். “இங்கு சோள வயல்கள் அதிகம். ஆனால், அவை மாசு மற்றும் பாதரசம் காரணமாக சீரழிந்துவிட்டன“ என்று அவர் கூறுகிறார்.
தேசியப் பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாரர்களால் ஜூலை 2016இல் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட விண்ணப்பத்தில் செப்டம்பர் 2005ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை இணைந்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளது என்னவெனில், ஆய்வை நடத்திய துணை மண்டல அலுவலர் குப்பைகள் அறிவியல் முறையில் பதப்படுத்தப்படுவதில் குறைபாடுகள் உள்ளதை கண்டறிந்துள்ளார். அதனால் தான் பெரியளவிலான குப்பை குவிந்து கிடக்கிறது. இந்த குப்பையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கத்ராஜ் – சஸ்வாத் புறவழிச்சாலையில் ஓடி, காலா ஓதா மற்றும் பர்சிகா ஓதா என்ற இரண்டு ஓடைகளையும் மாசாக்கி, மஞ்சரி கிராமத்தில் சென்று அது கலக்கும் முலா – முத்தா ஆற்றையும் மாசாக்குகிறது. இந்த நச்சுக்கழிவுகள் இங்குள்ள உருளி தேவாச்சி, புர்சுங்கி, ஷீவல்வாடி மற்றும் மஞ்சரி ஆகிய நான்கு கிராத்தில் உள்ள 4 லட்சம் பேரின் வாழ்க்கைக்கும் அச்சுறுத்துவதாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாசுபாடுகள் பஜ்ரே போன்ற விவசாயிகளுக்கு பாசனம் செய்ய தூய்மையான தண்ணீர் கிடைக்காமல் செய்துவிட்டது. சிறிய கட்டுமானத்தொழிலில் இருந்து பஜ்ரே தற்போது வருமானம் ஈட்டி வருகிறார். இதுபோன்ற பலர் வருமானத்திற்காக வேறு சில வழிகளை தேர்ந்தெடுக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சிலர் பிளம்பர்களாகவும், மற்றவர்கள் நகரில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் மாறிவிட்டனர்.
“நான் அந்த மாசான நீரை பயன்படுத்தினால், அது மண் மற்றும் விளைச்சலையும் பாதிக்கும்“ என்று பஜ்ரே கூறுகிறார். “கிணற்றில் உள்ள தண்ணீர் கூட கெட்டுவிட்டது. அது கருமையாகவும், எண்ணெய் கலந்தது போன்றும் மாறிவிட்டது. அதை இதற்கு மேல் பயன்படுத்த முடியாது. இங்குள்ள பெரும்பாலான விவசாயிகள் மழையை சார்ந்தே உள்ளனர். புனே நகராட்சி குடிநீருக்கு தொட்டிகள் மூலம் தண்ணீர் வழங்குகிறது“ என்று அவர் மேலும் கூறினார்.
உருளி தேவாச்சி ஊராட்சியின் துணைத்தலைவர் மகேந்திர ஷீவாலேவுக்கு எட்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் அவர் காய்கறிகள், கம்பு, சோளம் மற்றும் பல்வேறு தானியங்கள் பயிரிட்டு வருகிறார். அவரது கிணற்றிலிருந்து அவர் பாசனவசதி பெறுகிறார். ஆனால் விளைச்சல் குறைந்துவிட்டதாக புலம்புகிறார். “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆண்டுக்கு 20 குவிண்டால், கோதுமை அறுவடை செய்வார். ஆனால் தற்போது ஆண்டுக்கு 10 முதல் 12 குவிண்டால் கோதுமையே கிடைக்கிறது. நான் பயிரிடும் காய்கறிகளின் அளவும் குறைந்துவிட்டது“ என்று அவர் கூறுகிறார்.
பசுமை தீர்ப்பாயத்தின் முன் உள்ள மனுவும், புனே நகராட்சி கொட்டும் பதப்படுத்தப்படாத குப்பையால் கிராமப்புற மக்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள் குறித்தும் பேசுகிறது. உருளி தேவாச்சியில் பருவமழை நன்றாக பொழிவதில்லை. மலைபோல் குவிந்திருக்கும் குப்பையிலிருந்து வரும் துர்நாற்றம் மற்றும் புகை கிராமம் முழுவதுமே காற்றில் பரவி, நோய்கள் பரவுவதற்கு காரணமாகிறது. இங்கு தொடர் தலைவலியால் அவதிப்படுபவர்களில் பஜ்ரேவும் ஒருவர். இங்கு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம் உள்ளனர்.
ஏற்கனவே உள்ள மோசமான சூழலில், கிராமத்தினருக்கு அரிதாகவே சுகாதார வசதிகள் கிடைக்கின்றன. “புனே நகராட்சி இங்கு ஆரம்ப சுகாதார மையத்தை அமைத்துள்ளது. இங்கு மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், மருத்துவர்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வருவார்கள்“ என்று பஜ்ரே கூறுகிறார். பாபாசாகேப் பாப்கார், உருளி தேவாச்சியில் பிளம்பராக பணிபுரிந்து வருகிறார். மந்தமாக செயல்படும் மாநில அரசின் மருத்துவமனைகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளார். “எனது மனைவிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டபோது, நான் ரூ.75 ஆயிரம் செலவழித்தேன். நான் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தேன். அரசு மருந்துவமனைகளில் போதிய வசதிகளும், மருத்துவர்களும் இல்லை. புனே நகராட்சி தொடர்ந்து எங்கள் கிராமத்தில்தான் குப்பை கொட்டும் என்றால், குறைந்தபட்சம் எங்கள் மருத்துவ செலவுகளையாவது அது கவனித்துக்கொள்ள வேண்டும்“ என்று அவர் கூறுகிறார்.
சுகாதார சீர்கேடுகளை தவிர, எதிர்பாராத மற்ற சமூகம் சார்ந்த பிரச்னைகளும் இங்கு எழுந்துவருகிறது என்று ஷீவாலே கூறுகிறார். “இங்குள்ள பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு பெரும்பாலானோர் விருப்பம் காட்டுவதில்லை. எங்கள் வீடுகளுக்கு உறவினர்கள் வரும்போது, அவர்கள் நாங்கள் வழங்கும் தண்ணீரைக்கூட குடிக்க மறுக்கின்றனர்“ என்று அவர் கூறுகிறார்.
எண்ணிலடங்கா புகார்கள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகும் நகராட்சி குப்பை கிடங்கிற்கான மாற்று இடத்தை தேர்வு செய்வதில் தொய்வு காட்டுகிறது. “தலைவர்கள் வருகிறார்கள், செல்கிறார்கள், பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். ஆனால், இங்கு வசிக்கும் நாங்கள்தானே பாதிக்கப்படுகிறோம்“ என்று பஜ்ரே கூறுகிறார். இது பெரும்பாலான மக்களை உருளி தேவாச்சி மற்றும் புர்சுங்கியிலிருந்து வெளியேறி புனேயில் சென்று தங்குவதற்கு தூண்டியது. ஆனால், இதில் விந்தையான ஒன்று என்னவெனில், இந்த இரண்டு கிராமங்களிலும், நிலத்தின் விலை ஏறிக்கொண்டு வருகிறது. இங்கு விவசாய விளை நிலங்கள் இப்போது வீட்டுமனைகளாக மாற்றம் பெற்று வருகின்றன. புனேவில் வீடு வாங்கும் அளவிற்கு வசதியில்லாதவர்கள், இந்த கிராமங்களில் இடம் வாங்குகின்றனர். புனேவிற்கு அருகில் உள்ளதால், ரியல் எஸ்டேட் தொழிலை ஈர்ப்பதாக உள்ளது. “மேலும் விவசாயசம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது“ என்று பிஸ்வாஸ் கூறுகிறார்.
இந்த கிராமத்தில் உள்ளவர்கள், இந்த குப்பைக்கிடங்கை முழுமையாக மூட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த குப்பைக்கிடங்கை மூட உத்தரவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். “நாங்கள் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனே குப்பை வண்டிகள் கிராமத்தில் நுழைவதை தடுத்தபோது, புனே நகர் முழுவதும் பாதிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் பாதிப்பு கொஞ்ச நாட்கள் மட்டுமே இருந்தது.“ என்று ஷீவாலே கூறுகிறார். யாரேனும் உங்கள் வீட்டிற்கு வந்து, அவர்களின் குப்பைகள் உங்கள் வீட்டில் கொட்டிவிட்டு போனால் எப்படி இருக்கும்? என்று அம்மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழில்: பிரியதர்சினி.R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.
Editor's note
விஜய்டா லால்வாணி, புனேவில் உள்ள ஊடகம் மற்றும் தொடர்பியல் துறை சிம்பயாசிஸ் மையத்தில், 2016ம் ஆண்டு பட்டம் பெற்றார். இக்கட்டுரை அவரது 2015ம் ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாத பாரி நிறுவன பயிற்சியின்போது எழுதப்பட்டது.
இக்கட்டுரை பாரியின் இணையதளத்தில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடப்பட்டது.